திருமலை:
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.நரேஷ் குமார் சமீபத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்தபோது, பிரதான கேட் மூடப்பட்டிருந்தது. அவர் அந்த வழியாக செல்ல முயன்றபோது அருகில் நின்றிருந்த தேவஸ்தான் ஊழியர் ஒருவர், அவரை அந்த வழியாக செல்ல வேண்டாம், வேறு ஒரு பாதை வழியாக செல்லவேண்டும் என கூறி உள்ளார்.
வி.ஐ.பி.க்கள் யாரையும் இந்த பாதை வழியாக அனுமதிக்க வேண்டாம் என அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் போர்டும் வைத்துள்ளனர். எனினும் கோமடைந்த நரேஷ் குமார், அந்த ஊழியரை கடுமையாக திட்டி அவமதித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் இந்த செயலை பக்தர்கள் கண்டித்துள்ளனர். சிலர் வி.ஐ.பி.க்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. #SaveTirumalaFromTDP என்ற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
“ஏழுமலையான் முன்னிலையில் இருப்பதை மறந்துவிட்டு அந்த ஊழியரை நரேஷ் குமார் திட்டுகிறார். இவ்வளவு நாகரிகமற்றவர்களுக்கு தேவஸ்தான் அங்காவலர் குழு உறுப்பினர் பதவியை நீங்கள் கொடுத்தீர்கள். முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அவர்களே இது உங்களுக்கு அவமானம்” என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறி உள்ளது.