புதுடெல்லி: இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மோடி அரசு ஆபத்தில் ஆழ்த்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சீனாவுக்கு இந்தியாவின் கோபத்தை (சிவந்த கண்களை) காட்டுவதற்குப் பதிலாக சிவப்பு கம்பள வரவேற்பை பிரதமர் மோடி அளிக்கிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை மிகவும் முக்கியமானவை. ஆனால், மோடி அரசோ அவற்றை ஆபத்தில் ஆழ்த்துகிறது. உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுக்களை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் முன்வைக்கிறோம். அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களில் குடியேற்றத்தைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, நமது எல்லையில் சீனா இதுபோன்று 628 கிராமங்களில் சீனர்களை குடியேற்றியதாக செய்தித்தாள்கள் தெரிவித்தன.
மோடி அரசு எல்லையில் ‘துடிப்பான கிராமங்கள் திட்டத்தை’ நிறைய ஊக்குவிக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசினார். ஆனால், உண்மை என்னவென்றால், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் 90% நிதி கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்படவில்லை. இந்தத் திட்டம் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடி நிதியில் ரூ.509 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில், 75 கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில், மோடி அரசாங்கம் கிட்டத்தட்ட எந்த நிதியையும் வழங்கவில்லை.
டிசம்பர் 2024-இல், சீனா பிரம்மபுத்திரா நதியின் மீது ‘உலகின் மிகப் பெரிய அணையை’ கட்டப்போவதாக அறிவித்தது. இது நமது தேசிய பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இந்தியாவின் நன்னீர் வளங்களில் 30% பிரம்மபுத்திரா நதியில் உள்ளது, இதன் ஓட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
2022-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலின்படி, “மார்ச் 2021-இல், சீனா தனது 14-வது ஐந்தாண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டது, இது பிரம்மபுத்திரா நதியின் கீழ் பகுதிகளில் நீர்மின் திட்டங்களுக்கான திட்டங்களைக் குறிப்பிடுகிறது” என்று உங்கள் அரசு கூறியது. அப்படியானால், 2021-ஆம் ஆண்டிலிருந்தே மோடி அரசு இந்த விஷயத்தைப் பற்றி அறிந்திருந்தது, ஆனாலும் உங்கள் அரசு முற்றிலும் அமைதியாக இருந்தது.
விஷயம் தெளிவாக உள்ளது… பிரதமர் மோடி அவர்களே, உங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அல்ல, உங்களுக்கான மக்கள் தொடர்பும் பொய்யான விளம்பரங்களுமே!” என்று கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.