ஒரு நாடு முன்னேற்றம் அடைய ஆணிவேராக இருப்பது ‘பொருளாதாரம்.’ ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பொருளாதார வளர்ச்சி இலக்குகளை வைத்து பயணித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்பதைக் குறிக்கோளாக வைத்து செயல்பட்டுவருகிறது.
பல தொழில்முனைவோர்களை உருவாக்கி, தொழில் துறையில் ஆழமாகத் தடம் பதிப்பதன் மூலம்தான் இந்தக் குறிக்கோளை வெற்றிகரமாக அடைய முடியும். அந்த வகையில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு, விடாமுயற்சியுடன் மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கி சாதித்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கெளரவிக்கும் விதமாக ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது’ 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் 2024-ம் ஆண்டுக்கான விருது விழா பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த 8-ம் ஆண்டு விருது விழாவை வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். அவர் பேசும்போது, நாணயம் விகடன் 20 ஆண்டு காலம் மக்கள் மத்தியில் நிதி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைப் பற்றி பெருமை யுடன் பேசினார். மேலும், தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக நிதி ஆலோசனை வழங்கும் வகையில் விகடன் குழுமத்திலிருந்து ‘லாபம்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கி யிருப்பது பற்றியும் குறிப்பிட்டார்.

மனித வளமும் – டிரில்லியன் டாலர் இலக்கும்…
விழாவின் முதல் நிகழ்வாக, விழாவின் தலைமை விருந்தினரும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டில் உள்ள டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் குறித்து சிறப்புரை யாற்றினார். “இன்று உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை உருமாறியுள்ளது. ஐ.டி துறையைப் பொறுத்த வரை அதன் நல்லது, கெட்டது இரண்டுமே அசாத்திய விரிவாக்கத் திறன் கொண்டவையாக உள்ளன. பல கட்டங்களை, பல தொழில்நுட்பங் களைக் கடந்து வந்திருக்கும் நாம் இன்று ஏ.ஐ காலத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை நாம் வேக மாக எட்ட ஐ.டி துறை யில் பல புத்தாக்கங் களைச் செய்ய வேண்டும். இது போன்ற மாற்றத்துக்கு அடிப்படைத் தேவை மனிதவளம். அந்த வகையில் பார்த்தால் சிறந்த மனிதவளம் நம்மிடம் இருக்கிறது. ஏ.ஐ தொழில்நுட்பம் சில காலங்களுக்கு ஒரு முறை மாற்றங்களை எதிர்கொண்டு புதுமைத் தன்மையுடன் பயணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டு இளைஞர்கள் எப்படி கற்று, முன்னேறி வரப்போகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலம் பல்வேறு பயிற்சிகள், வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கி தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிக்கும் திறனை வளர்ப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வெற்றியில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கப்போகிறது” என்று உற்சாகமூட்டிப் பேசினார். இதையடுத்து, விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
விருது வழங்கியபோது

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
விருது வழங்கியபோது
என் நிறுவனம் என் மகளைப் போன்றது…
‘ ஜெய்ப்பூர் ஜெம்ஸ்’ எனும் வைர வியாபாரக் குடும்பத்தில் பிறந்த மிதுன் சச்செட்டி, அதில் இன்னும் உச்சத்தைத் தொட விரும்பி, வைர நகைகள் தொடர்பான உயர்கல்வியை வெளிநாட்டில் படித்து முடித்தார். இந்தியா வந்தவர் ஆன்லைன் வைர வியாபாரத்தைத் தொடங்கும் கனவைக் கண்டார். அதற்காக இவர் தொடங்கிய கேரட்லேன் நிறுவனம் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றி கண்டது. சில ஆண்டுகளில் டாடாவின் டைட்டன் நிறுவனம் கேரட்லேனை விலைக்குக் கேட்க, ரூ.17,000 கோடிக்கு விற்றார். இன்று பல்வேறு தொழில்களுக்கு முதலீட்டு உதவிகளைச் செய்யும் வென்ச்சர் கேப்பிடலிஸ்டாக உருவெடுத்துள்ளார்.
மிதுன் சச்செட்டியின் பிசினஸ் திறமையைப் பாராட்டும் வகையில் அவருக்கு நாணயம் விகடனின் ‘Business Outlier Award’ விருதை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட மிதுன் சச்செட்டி, “என் மகள் பிறந்தபோது தான் நான் கேரட்லேன் நிறுவனத்தையும் தொடங்கினேன். அதை டாடா நிறுவனம் விலைக்குக் கேட்டபோது உணர்ச்சிகரமாக இருந்தது. கேரட்லேன் என் மகளைப்போல தான். அவள் இப்போது திருமணமாகி வேறு வீட்டில் இருப்பதாக உணர்கிறேன்” என்று அவர் பேசியபோது, அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

விருது வழங்கிய ‘போத்தீஸ்’ ரமேஷ், ‘அப்போலோ மருத்துவமனை’ டாக்டர் ராகுல் ஆர்.மேனன்

‘பொன்ப்யூர்’ பொன்னுசாமி மற்றும்
‘டி.வி.எஸ் டிரஸ்ட்’ ஸ்வரன் சிங்
எனக்கான இடத்தை நான் உருவாக்குவேன்…
தென்காசி மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த லக்ஷ்மணன் சிவில் இன்ஜினீயரிங் முடித்தவர். எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்தவர், நண்பர்களை பார்க்க துபாய் சென்றபோது துபாய் பிடித்து விட அங்கேயே வேலைக்குச் சேர்ந்தார். சிக்கலில் இருந்த ஒரு புராஜெக்ட்டை இவர் தன் திறமையால் முன்கூட்டியே முடித்துக் கொடுக்க அதற்குப் பரிசாக சி.இ.ஓ பதவி கிடைத்தது. பிறகு, அவரே சொந்தமாக தொடங்கிய டெக்டான் நிறுவனம் நீர் தொழில்நுட்பத்தில் 15 நாடுகளில் சேவை செய்து வருகிறது.
இன்று உலக அளவில் 20 நிறுவனங்களை நடத்திவரும் டெக்டான் குழுமத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.லக்ஷ்மணனுக்கு ‘Self Made Entrepreneur Award’ விருதை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட லக்ஷ்மணன், “நான் 27 வயதில் சி.இ.ஓ பதவிக்கு வந்தேன். 10 ஆண்டுகள் அதே பதவியில் இருந்தேன். பின் பதவி உயர்வு கேட்டபோது, என் நிறுவனத்தின் இயக்குநர், ‘இனி எனது சீட் மட்டுதான் இருக்கிறது, அந்த சீட்டை தரட்டுமா?’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘எனக்கான இடத்தை நான் உருவாக்கிக் கொள்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு சொந்த மாகத் தொழிலைத் தொடங்கி இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளேன்” என்று தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.


அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிவராஜா ராமநாதன்
அடையார் டு அமெரிக்கா…
பல தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வெற்றிகரமாக அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தை உருவாக்கியிருக்கும் சகோதரர்கள் கே.டி.வெங்கடேசன், கே.டி.ஸ்ரீனிவாசா ராஜாவுக்கு ‘Phoenix Business Award’ விருதை போத்தீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரமேஷ் போத்தி, அப்போலோ மருத்துவ மனையின் சி.இ.ஓ மற்றும் மெடிக்கல் சர்வீசஸ் இயக்குநர் டாக்டர் ராகுல் ஆர்.மேனன் இருவரும் இணைந்து வழங்கினர்.
விருதைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள், “வயிற்றுப் பசியை சமாளிக்கத் தான் தொழிலில் அடியெடுத்து வைத்தோம். நிறைய போராட் டங்கள், சறுக்கல்கள் இருந்தன. அதை யெல்லாம் விடா முயற்சியுடன் தாண்டி வந்தோம். அடையாரில் தொடங்கிய எங்கள் பிசினஸ் இப்போது அமெரிக்கா வரை சென்றுவிட்டது. இதை எங்கள் நிறுவனத்துக் கான வெற்றி என்று சொல்வதைவிட, ஒட்டுமொத்த உணவுத் துறைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்” என்று பெருமையுடன் பேசினார்கள்.
கூட்டு முயற்சி வெற்றி தரும்:
ஈரோடு மக்களுக்காக ஆக்கபூர்வமாக யோசித்து, ஈரோடு மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஒளிரும் ஈரோடு’ அறக்கட்டளை. கிட்டத்தட்ட 90 தொழில் முனைவோர்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் இந்த அமைப்பின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒளிரும் ஈரோடு அறக்கட்டளைக்கு ‘Business Social Conscious’ விருதை பொன்ப்யூர் கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், டி.வி.எஸ் டிரஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்வரன் சிங் ஆகிய இருவரும் வழங்கினர்.
விருதைப் பெற்றுக்கொண்ட ஒளிரும் ஈரோடு குழுவினர், “நல்ல விஷயங்களைத் தனியாகச் செய்வதைவிட, கூட்டாக செய்யும்போது எளிதில் வெற்றியைத் தரும். மருத்துவ வசதி, நீர்வளம் மேம்படுத்துதல், அடிப்படை கல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்த நாங்கள், இப்போது மரம் வளர்ப்பில் கவனம் செலுத்தி நிறைய மரங்களையும் நட்டு வருகிறோம். காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க நம்மிடம் இருக்கும் ஒரே வழி மரம் நடுவதுதான்” என்றவர்களின் பேச்சில் என்றும் குறையாத சமூக அக்கறையைப் பார்க்க முடிந்தது.
ஸ்டார்ட்அப் சாம்பியன்…
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொய்ன் ஆகியோருக்கு ‘Startup Champion Award’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மற்றும் நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மார்க்கெட்ட் பிரிவின் தேசியத் தலைவர் அபிஜித் பட்டோலே, மண்டலத் தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் இணைந்து வழங்க அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டார்கள்.
புதுமையில் கவனம் செலுத்த வேண்டும்…
தமிழகத்தின் பத்து முக்கிய நகரங்களில் ஸ்டார்ட்அப் மையங்களை அமைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஸ்டார்ட்அப் ஐடியாக்களை வரவேற்று, மெருகேற்றி பிசினஸ் வடிவம் கொடுத்து வரும் ‘ஸ்டார்ட்அப் டி.என்’ நிறுவனத்துக்கு ‘Business Mentor Award’ (Institution) விருதை விகடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன் வழங்க, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ‘ஸ்டார்ட்அப் டி.என்’ நிறுவனத்தின் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.
விருதைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசுகையில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மிக மிக முக்கியம். இதை உணர்ந்த முதல்வர் அவர்கள், சிறு, குறு தொழில் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை திட்டம் தீட்டி, வேகவேகமாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளார். 2021-ம் ஆண்டு சிறு குறு தொழில் வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் இறுதி பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் ஸ்டார்ட்அப் அமைப்புக்கு என்று தனி நிர்வாகமே இல்லை. ஆனால், இப்போது ‘ஸ்டார்ட்அப் டி.என்’ என்ற அமைப்பை தொடங்கி அதில் 100-க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் பணியாற்றி சிறு குறு தொழில் துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இத்தகைய வளர்ச்சிக்கு அரசின் முன்னெடுப்புகள் முக்கியமான காரணம்” எனக் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிவராஜா ராமநாதன், “எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களாக இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் புதுமை என்பதும், மாற்றம் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. பெரிய பெரிய நிறுவனங்களை வளர்த்து எடுப்பதை விட, அனைவரும் உள்ளடக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம்” என்று எதிர்கால வளர்ச்சி குறித்து பேசினார்.

‘பெரியார் மணியம்மை’ டி.கிருஷ்ணகுமார்
ஐடியாதான் எதிர்காலம்…
கேஸ் டர்பைன், எலெக்ட்ரிக் ஏர்கிராஃப்ட், ராக்கெட் இன்ஜின் சார்ந்த ஸ்டார்ட்அப் ஐடியாக்களுக்கு வழிகாட்டுபவர் பேராசிரியர் சத்யநாராயணன் சக்கரவர்த்தி. இவர் ஐ.ஐ.டி மெட்ராஸின் National combustion research and development மையத்தின் தலைவராக இருப்பதுடன் கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருந்து 30 மில்லியன் டாலர் தொகையைத் திரட்டியிருக்கிறார். இவருக்கு ‘Business Mentor Award’ (Individual) விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் அட்மிஷன் துைற துணை இயக்குநர், பேராசிரியர் டாக்டர் டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
விருதைப் பெற்றுக்கொண்ட சத்ய நாராயணன் சக்ரவர்த்தி பேசுகையில், “இதுவரை நாங்கள் செயல்படுத்திய ஸ்டார்ட் அப் எல்லாம் ஐடியா அடிப்படையில் தனித்துவமானது. நிறைய ஐடியாக்களுடன் இளைஞர்கள் வருகிறார்கள். நல்ல பிசினஸ் ஐடியாக்கள்தான் எதிர்காலம். எனவே, புதுமையான ஐடியாக் களில் கவனம் செலுத்து வோம்” என்று கூறினார்.
விகடனின் மறுமதிப்பீடு…
கோதுமையில் தொழிலை தொடங்கி இன்று பாஸ்தா, ஒயாலோ பீட்ஸா பல வெரைட்டிகளில் இடம் பிடித்து, 50,000 ரீடெயில் அவுட்லெட்கள், ஐடிசி, பிரிட்டானியா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மூலப்பொருள்களை சப்ளை செய்வதில் முன்னணி இடம் பிடித்த நாகா ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு ‘Business Innovation Award’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்க, நாகா ஃபுட்ஸ் முழுநேர இயக்குநர் சௌந்தர் கண்ணன் மற்றும் மோனா கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். விருதைப் பெற்ற சௌந்தர் கண்ணன், ‘‘80 வருட தொழில் அனுபவம், 60 வருட உற்பத்தி அனுபவம் இதில் பிசினஸ் சார்ந்து புதுமைகளைச் செய்யும்போது சரியான வழியில் செல்கிறோமா என்ற யோசனை இருக்கும். ஆனால், விகடனின் இந்த விருது எங்களுக்கு கிடைத்த மறுமதிப்பீடு” என்று பெருமை பொங்க பேசினார்.
தமிழகத்தின் தலைசிறந்த சில தொழில் அதிபர்களின் வாழ்த்துகளுடனும் புதிய பொருளாதார இலக்குகளுடனும் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.