மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ரானேந்திரா பிரதாப் ஸ்வைன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாநதியின் மேல்நிலை நீர்பிடிப்புப் பகுதியில் தண்ணீரை திட்டமிடாமல் அதிகமாக பயன்படுத்துவதால் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் மாநிலங்களுக்கு அருகே அமைந்துள்ள ஹிராகுட் அணைப் பகுதியில் கீழ்நிலை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு நிலையான நீர் மேம்பாட்டு பாதுகாப்பை தக்கவைப்பதற்காக மகாநதி ஆற்றில் 16 அணைகளும், 16 தடுப்பணைகளையும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
மழைப்பொழிவு இல்லாத மாதங்களில் மகாநதி ஆற்றில் இருந்து போதிய அளவுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று ஒடிசா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் முந்தைய நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மகாநதி நீர் தகராறு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. மகாநதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு தற்போது தீர்ப்பாயத்தின் விசாரணையின் கீழ் உள்ளது.