மதுரை எய்ம்ஸ் கட்டுமான முதல்கட்ட பணியில் 24% நிறைவு: தலைமை நிர்வாக அதிகாரி  தகவல்

மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதன்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹனுமந்த ராவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எய்ம்ஸ் கட்டுமானத்தில் முதல் கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ , மாணவியர் தங்கும் விடுதிகள், அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கிய கட்டிடங்கள் இடம் பெறுகின்றன.

இப்பணி தொடக்க நாளில் இருந்து 18 மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது. 2வது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027க்குள் 33 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்த கட்டுமானத்தில் 14.5% முன்னேற்றம் அடைந்துள்ளது. 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் அடங்கி உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச் சேர்க்கையும் நடக்கிறது.

ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிரந்தர வளாகத்திற்குள் மாற்ற முயற்சி நடக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மற்றொரு சுகாதார மையம் மட்டுமல்ல – இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வி வழங்க வேண்டுமென உறுதிக்கொண்டுள்ளது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.