நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்த பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி அங்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். முதலில் சுருவா எல்லையில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு சென்ற அவர் சிறிது நேரம் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு பச்ரவன் சென்ற அவர் அங்கு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் வாக்குச் சாவடி மட்டத்தில் தங்களது பலத்தை அதிகரிக்க வேண்டும். நாட்டில் பணவீக்கம் என்பது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் மோடி தலைமையிலான பாஜக அரசு முதலாளிகளுக்கு சேவை செய்வதிலும், அவர்களை ஊக்குவிப்பதிலும் மட்டுமே அக்கறை காட்டி வருகிறது. உண்மையில், பாஜகவும், மத்திய அரசும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பி வருகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் வருகையையொட்டி 25-க்கும் மேற்பட்ட பாஜவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டினார். ஆனால், காவல் துறையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.