புதுடெல்லி: பாஜகவில் டெல்லி சட்டபேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெய் பைஜயந்த் பாண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவை டெல்லியில் அரியணை ஏற்றியிருக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் இந்த இமாலய வெற்றியை திரைக்கு பின்னால் இருந்து சாத்தியமாக்கியவர் ஜெய் பாண்டா என்று அழைக்கப்படும் பைஜயந்த் பாண்டா. 61 வயதாகும் இவர் ஒடிசாவிலிருந்து ஐந்து முறை எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு டெல்லி பொறுப்பாளராக பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே பாஜகவின் தேசிய துணைத் தலைவர், செய்தி தொடர்பாளர், அசாம் மாநில பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளும் ஜெய் பாண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கூட டெல்லி பொறுப்பாளராக பணியாற்றினார்.
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய ஜெய் பாண்டா, 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக , உத்தர பிரதேசத்திற்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான பைஜயந்த் பாண்டா, புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்வதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட 31 பேர் கொண்ட குழுவின் தலைவராகவும் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் பொறுப்பாளராக ஜெய் பாண்டாவை பாஜக நியமித்தது. 1998-க்கு பிறகு பாஜக டெல்லியில் வெற்றிபெறவே இல்லை என்பதால் இந்த பொறுப்பு மிகப்பெரியதாக கருதப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்பட கையாண்டு தனது அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி, டெல்லி வாக்காளர்களை கவரும் பிரச்சாரத்தை பாண்டா திரைக்குப் பின்னால் இருந்து மிக நுணுக்கமாக மேற்கொண்டார்.
தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை மீண்டும் டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளார் ஜெய் பாண்டா. முன்னதாக, 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு 143 நாட்களுக்கு முன்பு பாஜகவின் அசாம் பொறுப்பாளராக பாண்டா நியமிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.