புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் இங்கே…
ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் டெல்லிக்கு பெயர்ந்துவிட்டனர். அன்றிலிருந்தே அவர் டெல்லிவாசிதான்.
டெல்லி பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது ரேகா குப்தால் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினரானார். பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவிலும் இணைந்தார். அரசியலில் ஆரம்பகாலம் தொட்டே அவர் கொண்டிருந்த ஈடுபாடுதான் அவரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட உந்தியுள்ளது.
1996-1997 காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார் ரேகா குப்தா. தியாள் சிங் கல்லூரியின் செயலராகவும் இருந்தவர். மாணவர்களின் குரலாக பல்வேறு தருணங்களில் அவர் ஒலித்தார். அது அவரை பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள உதவியதாகத் தெரிகிறது.
ரேகா குப்தாவின் தீவிர அரசியல் பயணம் 2000-ம் ஆண்டில்தான் தொடங்கியது எனலாம். அந்த ஆண்டுதான் அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பில் சேர்ந்து அதன் டெல்லி பிரிவு செயலாளராக பணியாற்றினார். அங்கே அவருடைய தலைமைப் பண்பு துரித கவனம் பெற்றது. அதன் நீட்சியாக அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை அவர் 2004 முதல் 2006-ம் ஆண்டு வரை அலங்கரித்தார். அங்கே அவர் காட்டிய வலுவான நிர்வாகத் திறன்களும், கட்சியின் மீதான அவரின் அர்ப்பணிப்பும் அடுத்தடுத்த உயரங்களை அவரை எட்டச் செய்தது.
2007-ஆம் ஆண்டு அவர் டெல்லி முனிசிபல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டார். வடக்கு பிதாம்புரா தொகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007 முதல் 2009 வரை டெல்லி முனிசிபல் கவுன்சிலில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக இருந்தார். இவை தவிர டெல்லி பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவிகளையும் பெற்றார்.
இப்போது டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 46 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.
50 வயதாகும் ரேகா குப்தா முதன்முறை எம்.எல்.ஏ ஆவார். டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வரிகள் இவை…
“எனது பொறுப்புணர்வின் மிது நம்பிக்கை கொண்டு எனக்கு முதல்வர் பதவியை வழங்கியுள்ள கட்சித் தலைமைக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். என் மீதான கட்சியின் நம்பிக்கையும், எனக்கு கட்சி தரும் ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உத்வேகத்தையும் தருகிறது.
நான் பூரண நேர்மையோடும், அர்ப்பணிப்போடும், ஒருமைப்பாட்டைப் பேணும் வகையில் கடமையாற்றுவேன். டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அவர்களுக்கான அதிகாரத்தை அளிப்பதற்காக, ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக செயல்படுவேன். டெல்லியை புதிய உச்சங்களை நோக்கிக் கொண்டு செல்லும் இந்த முக்கிய வாய்ப்பை முழு அர்ப்பணிப்போடு பயன்படுத்திக் கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார் ரேகா குப்தா.