அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் விகடன் ப்ளஸ் இணைய இதழில் பிப்ரவரி 10-ம் தேதி இரு கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. அந்த கார்ட்டூன், அமெரிக்க அதிபர் டிரம்பின் முன் பிரதமர் மோடி கை கால்களில் விலங்கிடப்பட்டு அமர்ந்திருப்பதைப் போல வரையப்பட்டிருந்தது.

பின்னர், இந்த கார்ட்டூன் பிரதமரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக, பிப்ரவரி 15-ம் தேதி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அண்ணாமலை புகார் கொடுத்தார். அன்று மாலையே விகடன் இணையதளப் பக்கம் முடங்கியது. அடுத்தநாள், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திலிருந்து விகடனுக்கு நோட்டீஸும் வந்தது. ஆனாலும், அதில் காரணத்தைக் குறிப்பிடவில்லை. இந்த விவகாரத்தில், பிப்ரவரி 20-ம் தேதி மத்திய அமைக்ககத்தின் கமிட்டியிடம் விகடன் தனது வாதத்தை முன்வைக்கவிருக்கிறது. மறுபுறம் விகடனுக்கு ஆதரவாக, மத்திய பாஜக அரசுக்கு பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடக சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில், கேரளா முற்போக்கு கலை இலக்கிய சங்கம் விகடனுக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “விகடன் இதழின் இணையதளத்தை முடக்கியது கருத்துரிமைக்கு எதிரான செயல். இந்தியர்களை விலங்கிட்டு நாடு கடத்தும் அமெரிக்க அரசின் கொடுமையான செயலுக்கு மோடி சரணடைவதாக கருத்து கொள்ளப்படும் கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காகவே இந்த நடவடிக்கை. சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ட்ரம்பின் அருகில் கைவிலங்குடன் சரணடைவதுபோல் அமர்ந்திருக்கும் மோடியை இந்த கார்ட்டூன் குறிக்கிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் புகாரைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றிய அரசு கேலிச்சித்திரங்களுக்குக்கூட அஞ்சுகிறது.

படைப்பாற்றல் துறையில் கருத்துரிமையையும், சுதந்திரத்தையும் சங்பரிவார் அமைப்பு தொடர்ந்து நசுக்கப் பார்க்கிறது. தமிழில் நீண்ட காலமாக இயங்கிவரும் ஊடகங்களில் விகடன் முக்கியமானது. அத்தகைய இதழின் இணையத்தைத்தான் ஒன்றிய அரசு முடக்கியது. நாட்டில் படைப்பாற்றல் சார்ந்த அழகியலை ஒழிப்பது பாசிச ஊடுருவலின் அடையாளம். ஊடக கருத்துரிமைக்கு எதிரான இந்த தாக்குதலுக்கு ஆக்கப்பூர்வமான எதிர்ப்பை மேற்படுத்திக்கொண்டு வரவேண்டும் என்று முற்கைபோக்கு கலை இலக்கிய சங்க மாநில குழு கோரிக்கை வைக்கிறது.” என முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் மாநில குழு தலைவரும் தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநருமான ஷாஜி என்.கருண் குறிப்பிட்டிருக்கிறார்.
– ஸ்ரீ
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
