`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' – உதயநிதி காட்டம்!

‘மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.

இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும் ‘தி.மு.க’ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இனி மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் ‘Go back Modi’ என்று சொல்லமாட்டோம், ‘Get Out Modi’ என்று சொல்வோம்” என்று காட்டமாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியிருந்த தமிழக ‘பா.ஜ.க’ தலைவர் அண்ணாமலை, “தைரியம் இருந்தால் ‘Get Out Modi’ மோடி என்று சரியான ஆளாக இருந்தால் சொல்லிப் பார்டா பார்க்கலாம்” என்று ஒருமையில் பேசியிருந்தார்.

உதயநிதி

கும்பமேளா கூட்டத்தில் சிக்கி வாரணாசியில் இருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது குறித்து பேசுவதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது அண்ணாமலை ஒருமையில் பேசிய விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, “ஒருமையில் அநாகரிகமாகப் பேசுவது அவர்களின் பழக்கம்தான்.

அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. என் வீட்டிற்கு முன்வந்து கலவரம் நடத்துவதாக, போஸ்டர் ஒட்டுவதாக சவால் விடுகிறார். முடிந்தால் அவரை வரச் சொல்லுங்கள். அண்ணா அறிவாலயம் இருக்கும் அண்ணாசாலை பக்கம் துணிவிருந்தால் வரச் சொல்லுங்கள். அண்ணாமலைக்கெல்லாம் நான் பதில் சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவருக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் தமிழ்நாட்டுகான நிதியை வாங்குவதற்கு ஏதாவது துணை நிற்கச் சொல்லுங்கள். தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தரத் துப்பில்லை, அவரெல்லாம் வீண் சவால் விடுகிறார். தேவையில்லாமல் சர்ச்சைகள் பேசுவதை விடுத்து, மக்களுக்குத் தேவையானதை பேசச் சொல்லுங்கள்” என்றார்.

அண்ணாமலை

விஜய் தனியாக `CBSE’ பள்ளி நடத்துகிறார், திருமாவளவன் தனியார் பள்ளி நடத்துகிறார் என்று அண்ணாமலை கூறியதற்குப் பதிலளித்த உதயநிதி, “அவர்கள் முறையாக ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று பள்ளி நடத்துகிறார்கள். சட்ட விரோதமாக அவர்கள் எதையும் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.