Doctor Vikatan: வெஜைனா பகுதியைச் சுத்தப்படுத்தவென வெஜைனல் வாஷ் (Vaginal wash) திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றை எல்லாப் பெண்களும் உபயோகிக்கலாமா… வெஜைனா பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சரியான முறையை விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
பலரும் வெஜைனல் வாஷ் திரவத்தைப் பயன்படுத்தி, வெஜைனாவின் உள்புறத்தைக்கூட சுத்தப்படுத்தலாம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது மிகவும் தவறு. மிகமிக மைல்டான வெஜைனல் வாஷ் அல்லது ஜெல் பயன்படுத்தி, வெஜைனாவின் வெளிப்பகுதியை மட்டும்தான் சுத்தப்படுத்த வேண்டும்.
வெஜைனாவுக்கென பிஹெச் அளவு ஒன்று இருக்கும். அதாவது அமில-காரத்தன்மையின் சமநிலை… அது சரியான அளவில் இருக்க வேண்டும். வெஜைனாவின் உள்பகுதியை வெஜைனல் வாஷ் அல்லது கடுமையான சோப் கொண்டு சுத்தப்படுத்தினால், அந்த பிஹெச் சமநிலை பாதிக்கப்பட்டு, தொற்று ஏற்பட ஏதுவாகும். பாக்டீரியா மற்றும் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வெஜைனாவில் உள்ள வல்வா என்ற பகுதி மிக மிக சென்சிட்டிவ்வானது. அதற்கேற்ப அதை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக தினமும் இருமுறையாவது உள்ளாடைகளை மாற்ற வேண்டும். வெஜைனா பகுதியில் உள்ள ரோமங்களை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும். ரோமங்களை நீக்க ஹேர் ரிமூவிங் க்ரீம் பயன்படுத்த வேண்டாம். அவற்றிலுள்ள கெமிக்கல் வெஜைனா பகுதியை பாதிக்கலாம். வாக்ஸிங்கும் செய்யக்கூடாது. ஷேவ் செய்து அகற்றுவதானால், அதன் பிறகு ஆன்டிசெப்டிக் லோஷன் உபயோகித்தால், இன்ஃபெக்ஷன் வராமல் தடுக்கலாம்.
உள்ளாடைகள் ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் இயல்பாகவே எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், சுலபமாக தொற்று ஏற்படலாம். எனவே, அந்த நாள்களில் கூடுதல் கவனத்தோடு, அதிகபட்ச சுத்தத்தோடு இருக்க வேண்டியது முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.