லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சங்கத்தை அடைய முடியும் என்றாலும், எங்கள் சிறையிலிருந்து கைதிகளால் அதை செய்ய முடியாது. எனவே உ.பி சிறைக்கைதிகளுக்கு திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் கொண்டுவர ஏற்பாடு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என அம்மாநில சிறைத்துறை மந்திரி தாரா சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அம்மாநிலம் முழுவதும் உள்ள 7 மத்திய சிறைகள் உள்பட 75 சிறைகளில் இருக்கும் கைதிகள் குளிப்பதற்கான ஏற்பாடுகள் மந்திரியின் மேற்பார்வையில் செய்யப்பட்டதாக சிறைச்சாலை இயக்குனர் ராமசாஸ்திரி தெரிவித்துள்ளார். சங்கமத்திலிருந்து புனித நீர் அனைத்து சிறைகளுக்கும் கொண்டு வரப்பட்டு வழக்கமான தண்ணீரில் கலந்து ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்பட்டது. பின்னர் கைதிகள் பிரார்த்தனை செய்த பிறகு தண்ணீரில் குளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.