கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அமைச்சர் பொன்முடி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்றார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, முன்னாள் எம்.பி பொன் கௌதமசிகாமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சென்றனர்.

அப்போது, அமைச்சர் பொன்முடி மீது ஊர்மக்கள் சேற்றை வாரியிறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அமைச்சருடன் வந்திருந்த தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் மீது சேறு வீசப்பட்டதாகவும், பணிசெய்ய விடாமல் தடுக்கப்பட்டதாகவும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், அமைச்சர் மீது சேற்றை அள்ளி வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவுசெய்து தேடிவந்தது.

இந்த நிலையில், ராமகிருஷ்ணனை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு படை இன்று கைது செய்து திருவெண்ணைநல்லூர் போலீஸில் ஒப்படைத்திருக்கிறது. அதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமகிருஷ்ணன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தால் இருவேல்பட்டு குறிவைப்படுத்தாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
