தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த ஏதேதோ செய்கிறார் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து இன்று (பிப்.21) நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியது: ”தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் இப்போட்டிகளை நடத்துகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் திட்டமிட்டு நமது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். புதிய கல்வி கொள்கையில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அதனை தமிழக அரசு எதிர்க்கிறது.
ராஜஸ்தான், மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்தி திணிக்கப்பட்டதால் அம்மாநில தாய்மொழிகளான ராஜஸ்தானி, மராத்தி போன்றவை அழிவை சந்தித்து வருகின்றன. அதுபோன்ற நிலை தமிழக்கு வந்துவிடக் கூடாது என்பதால்தான் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். மாணவர்களும் தாய்மொழியை நேசிக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.
டிரெண்டிங் ஆகாது: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ”பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த வாய்க்கு வந்த கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று கூட துணை முதல்வரை ஒருமையில் பேசியுள்ளார். மரியாதை, நாகரிகம் தெரியாவர், என்ன ஐபிஎஸ் படித்தார் என்று தெரியவில்லை. அந்த வகையில் இன்று முதல்வருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ‘ஹாஷ்டேக்’ பதிவு செய்துள்ளார். தனது கட்சியில் தான் முக்கியமானவர் என்பதை கட்சிகாரர்களுக்கு காண்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார். நிச்சயமாக அதெல்லாம் டிரெண்டிங் ஆகப்போவதில்லை.
தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கணினி பட்டா மற்றும் புதிய வீட்டுமனை பட்டா கோரி 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோல அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருவாய் துறையினர் ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் பட்டா வழங்கப்படும்” என்றார் அமைச்சர் கீதாஜீவன்.
முன்னதாக, ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. | அதன் விவரம்: சொன்னபடியே எக்ஸ் தளத்தில் ‘#கெட்-அவுட் ஸ்டாலின்’ பதிவிட்ட அண்ணாமலை!