சென்னை: இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16e என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE4 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு மாடலை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது.
உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டாம்பரில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது ஐபோன் 16e வெளிவந்துள்ளது. ‘e’ வரிசையில் ஆப்பிள் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை.
‘ஐபோன் 16e’ சிறப்பு அம்சங்கள்
- 6.1 இன்ச் OLED நாட்ச் டிஸ்பிளே
- ஏ18 ப்ராசஸர்
- ஐஓஎஸ் 18.4 இயங்குதளம்
- டைப்-சி சார்ஜிங் போர்ட்
- வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
- ஏஐ அம்சங்கள்
- 5ஜி கனெக்டிவிட்டி
- ஆக்ஷன் பட்டென்
- 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- வரும் 28-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
- 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 8ஜிபி ரேம்
- நானோ சிம் + இ-சிம் என சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்
- இந்த போனின் விலை ரூ.59,900 முதல் இந்தியாவில் தொடங்குகிறது
ஐபோன் 16e vs ஐபோன் 16: என்ன வித்தியாசம்: ஐபோன் 16e மற்றும் ஐபோன் 16 போன்களின் விலையில் ரூ.20,000 வரை வேறுபடுகிறது. 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட ஐபோன் 16 மாடல் இந்தியாவில் ரூ.79,900 என அதிகாரபூர்வமாக விற்பனை ஆகிறது. வடிவமைப்பு ரீதியாக பார்த்தால் ஐபோன் 16-ல் டைனமிக் ஐலேண்ட் அம்சம் உள்ளது. 16e மாடல் அகலமான நாட்ச்சை கொண்டுள்ளது.
இரண்டு போன்களின் டிஸ்பிளேவும் 6.1 இன்ச் என்ற அளவில் உள்ளது. இரண்டு போன்களின் கேமரா பிக்சல், சிப் என அனைத்தும் ஒன்றாகவே உள்ளது. இருப்பினும் டெக்னிக்கல் அம்சம் சார்ந்து சற்று வேறுபடுகிறது. இதை வைத்து பார்க்கும் போது குறைந்த விலையில் ஐபோனை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு ஐபோன் 16e சரியான சாய்ஸாக இருக்கும். ஒன்பிளஸ் 13, iQOO 13, ரியல்மி ஜிடி 7 புரோ போன்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கு விற்பனையில் ஐபோன் 16e சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.