புதுடெல்லி: டெல்லி முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசினர்.
இதுகுறித்து பவன் கல்யாணிடம் பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து ‘என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?’ என பிரதமர் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு நான் ‘இல்லை’ என்றேன். பிறகு அவர் தொடர்ந்து, ‘அங்கு செல்ல இன்னும் வயது இருக்கிறது. மக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள்’ என அறிவுறுத்தினார்” என்று பவன் கல்யாண் கூறினார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அரியணையில் பாஜக அமர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தார்.