காசா முனை,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இதனிடையே, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதன்படி, அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட ஒடெட் லிப்ஷிட் (வயது 85), ஷிரி பிபஸ் (வயது 32), அவரின் 4 வயது குழந்தை ஏரியல் பிபஸ், 9 மாத கைக்குழந்தை கிபிர் பிபஸ் ஆகியோரின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடல்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்த இஸ்ரேல், ஒடெட் லிப்ஷி, குழந்தைகள் ஏரியல் பிபஸ், கிபிர் பிபஸ் ஆகியோரின் உடல்களை உறுதி செய்தன. ஆனால், 4வது உடல் ஷிரி பிபசின் உடல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டிஎன்ஏ உள்பட அனைத்துவகையிலான ஆய்வுகளுக்குபின் 4வது உடல் ஷிரி பிபசின் உடல் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், அந்த உடல் பணய கைதிகள் யாருடைய டிஎன்ஏ உடனும் சேரவில்லை என தெரிவித்துள்ளது.
பணய கைதியின் உடலுக்குபதில் வேறு உடலை ஒப்படைத்த ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், கொல்லப்பட்ட பணய கைதியின் உடலை ஒப்படைக்காமல் ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு மிகப்பெரிய விலை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அடுத்த கட்டத்தை எட்டுமா? அல்லது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் சண்டை தொடருமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, போர் நிறுத்தத்தின் முதற்கட்ட ஒப்பந்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை நாளை ஒப்படைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.