திருப்பதி:
திருப்பதி கபிலத்தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் கங்கா பவானி சமேத சோமஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி திருப்பதி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவத்தின் நேற்று 2-வது நாள் விழா நடைபெற்றது. இதில் கபிலேஸ்வரர் சுவாமி காலை 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் கபிலேஸ்வர சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு. காட்சியளித்தார். பின்னர் சோமஸ்கந்த மூர்த்தி மற்றும் காமாட்சி தேவி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் பால், தயிர், தேன், பழம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில் பூத வாகன சேவை நடைபெற்றது. சோமாஸ் கந்தர் காமாட்சி தேவியுடன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவைக்கு முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்க பஜனைகள், கோலாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.