சென்னை: 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து காவல் ஆணையர் அருண் பாராட்டினார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் 2014-ம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த அருண் என்ற 20 வயது இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, இக்கொலை தொடர்பாக விஜயகுமார் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக, அப்போதைய கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் (தற்போது உதவி ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம்) இருந்தார். வழக்கு விசாரணை சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி, சாட்சிகள் ஆஜர்படுத்தியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்தும் கனகராஜ் சிறப்பாக பணி செய்தார். இதன் தொடர்ச்சியாக குற்றவாளிக்கு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2017-ம் ஆண்டு, சென்னை, விருகம்பாக்கம், கங்கை தெருவில் வசித்து வந்த ஜாகீர் உசேன் (25) என்பவரை சிலர் கொலை செய்தனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்.
அப்போதைய விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் சுப்பிரமணி (ஓய்வு) மற்றும் சீனிவாசன் (தற்போது உதவி ஆணையர், சைதாப்பேட்டை சரகம்) ஆகியோர் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளாக இருந்தனர்.
சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை முடிந்து ரத்தினராஜ், முரளி மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அண்மையில் ஆயுள் தண்டனை விதித்தது.
சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த உதவி ஆணையர்கள் கனகராஜ், சீனிவாசன் மற்றும் ஓய்வு பெற்ற ஆய்வாளர் சுப்ரமணி ஆகியோரை காவல் ஆணையர் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.