டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பிரியங்கா காந்தியை நேற்று சந்தித்து மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரி்க்கையை வலியுறுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வந்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்துவோம் என தொண்டர்கள் மத்தியில் உறுதி அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து செயல்படாத மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும், நன்றாக வேலை செய்யும் மாவட்டத் தலைவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் பதவிகளுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். இதற்கு மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, செல்வப்பெருந்தகை மீது அதிருப்தியில் இருந்த 25 மாவட்ட தலைவர்கள், கடந்த 19-ம் தேதி டெல்லி சென்று, தமிழக மேலிட பொறுப்பாளரை சந்தித்துப் பேசினர். அப்போது, மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட தலைவர்களையும், எம்.பி.க்களையும், இதர மக்கள் பிரதிநிதிகளையும் செல்வப்பெருந்தகை மதிப்பதில்லை என குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து புகார் தெரிவிக்க டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியங்கா காந்தியை நேற்று சந்தித்து, செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.