தமிழக மக்கள் மத்திய அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர்: இபிஎஸ்

தமிழகத்துக்கான பிஎம்ஸ்ரீ நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சர் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா போன்றோர் வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான், மத்திய அரசு அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தது. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் 1976-ல் அலுவல் மொழிகள் விதி வகுக்கப்பட்டு, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை எம்ஜிஆர், ஜெயலலிதா அரசுகள் கடைப்பிடித்தன. தற்போதும் இந்தக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால்தான் தமிழக மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, பிற மாநிலங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். எனவே, தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்றது. இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. மத்திய அரசு இதை உணர்ந்து, மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும்.

அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கையை, தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் தொடர்பாக மாநில அரசுடன் விவாதித்து, சமூக முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, மாநிலத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது, மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகும்.

இதனால், தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சமும், மத்திய அரசின் மீது வெறுப்பும் அடைந்துள்ளனர். எனவே, கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். திமுக அரசு மத்திய அரசை வலியுறுத்தி, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை மக்களவையில் விவாதிப்பதற்குத்தான் தமிழக மக்கள் 39 எம்.பி.க்களை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.