யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி’ என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது.
தியாகராஜன் குமாரராஜா யுகபாரதி குறித்து கூறுகையில், “மாடர்ன் லவ் சீரிஸ்க்கு பாடல்கள் எழுதலாம் என்று முடிவு செய்தப் பிறகு யாரிடம் கேட்கலாம் என்று என்னுடைய நண்பர் ராஜு முருகனிடம் கேட்டேன். ராஜூ முருகனுக்கு யுகபாரதி சிறு வயதில் இருந்தே தெரியும். ஆனால் அவர் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் யுகபாரதி நன்றாகவே பாடல்கள் எழுதுவார் என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார். எங்களிடம் குறிப்பிட்ட ரிசோர்ஸ் மட்டுமே இருந்தது. நாம் கொடுக்கின்ற காசுக்கு பாடல்கள் எழுதித் தருவது என்பதே பெரிய விஷயம். ஆனால் அதிலும் நான் பாடல்கள் இப்படி வரவேண்டும் அப்படி வரவேண்டும் என்று அவரிடம் கூறி வந்தேன். யுக பாரதிக்கு என்னை விட வயது மிகவும் குறைவு, ஆனால் அவருக்கு என்னைவிட அனுபவம் அதிகம். `நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் அங்கே வந்து பாடல்களை நேரிலேயே எழுதிக் கொடுத்து விடுகிறேன்’ என்று கூறி என்னிடம் நேரில் வந்து பாடல்களை எழுதி கொடுத்தார்.

அவர் முகம் சுளிக்காமல் நான் தற்குறித்தனமாக கேட்டுக்கொண்ட கேள்விகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு பாடல்வரிகளை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதிக் கொடுத்தார். மிகவும் பொறுமையாக அதை செய்து கொடுத்தார். மாடர்ன் லவ்வில் இருக்கிற ஒரு பாடலைத் தவிர மற்ற எல்லா பாடல்களும் யுகபாரதி எழுதியது தான். இந்த வயதில் இவ்வளவு புத்தகங்கள் எழுதி, இவ்வளவு பாடல்கள் எழுதி செல்வ வளத்தோடு இருக்கிறார் என்றால், இது மிகவும் அரிதான ஒரு விஷயம். இதற்கு அவருடைய ஒழுக்கம்தான் காரணம். நான் யுகபாரதி கூடவே இருக்கிறேனே தவிர, கவிதை, காதல் போன்ற எதுவுமே எனக்கு ஒட்டவில்லை. நான் அதில் இருந்து ஒதுங்கி தான் இருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ராஜூ முருகன், உடன் பயணித்த அனுபவங்களை கூறுகையில், “ முதலில் தியாகராஜன் குமாராராஜாவை சந்தித்த நிகழ்வை கூறுகிறேன். இயக்குநர் அ.வினோத் மூலம்தான் தோழர் தியாகராஜன் குமாரராஜாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. இரவு நேரங்களில் எங்களுடைய சோகங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு இடி தாங்கியைப் போல கிடைத்த நண்பர்தான் தோழர் தியாகராஜன் குமாரராஜா. நாங்கள் இருவரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவோம். எதைப்பற்றி வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்வோம். யுகபாரதி சொன்னது போல, வாழ்க்கையில் நமக்கு யாராவது ஒருவர் எதையாவது கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி எப்போது நான் தியாகராஜன் குமாரராஜாவிடம் பேசும் பொழுது ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்வேன். மாடர்ன் லவ்வில் ஆறு லவ் ஸ்டோரி இருக்கிறது. அதில் ஒரு ஸ்டோரி நீங்கள்

செய்ய வேண்டும் என்று சொன்ன உடனே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாடர்ன் லவ்வில் நான் செய்தது ஒரு பெண்ணினுடைய ஆட்டோபயோகிரபிக் கதை. ஆட்டோபயோகிராபிக் என்றாலே ஆண்களுக்கானதுதான் என்று சினிமாவில் உள்ளது. ஒரு பெண்ணினுடைய உணர்வில் இருந்து ஒரு கதையை எடுத்து காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு குமாரராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது சாத்தியமே இல்லை. அப்படி ஒரு கதையை தயார் செய்து அதனை காட்சிக்கு கொண்டுவர ஒரு பிரமாதமான டீம் உடன் இருந்தது. அவருடன் பயணித்த அனுபவங்கள் பிரமாதமாக இருந்தது.” என்று கூறினார்.
மாடர்ன் லவ் திரைப்படத்திற்கு முதலில் ராஜு முருகன் எழுதிய கதை குறித்து கூறிய தியாகராஜன் குமாரராஜா, “மாடர்ன் லவ்விற்கு ராஜு முருகன் முதலில் எழுதிய கதை திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்ணிற்கும், பாஜக ஐ.டி விங்கில் வேலை செய்கிற பையனுக்கும் உண்டான காதல் கதை தான் எழுதி கொடுத்தார்.

அந்தக் கதையினை கேட்டு அமேசான் நிறுவனத்தில் சென்னைலிருந்து அமெரிக்கா வரை அனைவரும் நடுங்கி, அந்த கதை வேண்டாம் என்று சொல்லி விட்டனர். அதன் பிறகு தான் அவர் வேறு ஒரு கதையை எழுதி கொடுத்தார்” என்றார்.