புதுடெல்லி: “நாங்கள் பதவியேற்று ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் எப்படி கேள்வியெழுப்ப முடியும்.” என்று டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் வாக்குறுதி மீறல் குற்றச்சாட்டுக்கு இன்னாள் முதல்வர் ரேகா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லியை காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் ஆண்டது. ஆம் ஆத்மி கட்சி 13 ஆண்டுகள் ஆண்டது. அதில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக, நாங்கள் பதவியேற்று ஒருநாளில் எங்களை எப்படி அவர்கள் கேள்வி கேட்க முடியும்? பதவிப் பிராமாணம் எடுத்து முடித்த பின்பு முதல் நாளிலேயே நாங்கள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினோம். ஆம் ஆத்மி கட்சியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
எங்களைக் கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை. நாம் இப்போது டெல்லியைப் பற்றி கவலைப்படுவோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் டெல்லி அதன் உரிமைகளைப் பெறும். அவர்கள் அவர்களின் கட்சியை முதலில் பார்க்கட்டும். அங்கிருந்து பலர் வெளியேற விரும்புகிறார்கள். சிஏஜி அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள் அதில் பலர் அம்பலப்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிஷியின் குற்றச்சாட்டு: டெல்லியின் முன்னாள் முதல்வர் அதிஷி வியாழக்கிழமை வெளியிட்ட வீடியோ செய்தியில், “பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டெல்லி பெண்களுக்கு ரூ.2,500 கிடைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்திருந்தது. புதிய முதல்வரும், அவரது அமைச்சரவையும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளனர்.
இரவு 7 மணிக்கு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்துள்ளது. டெல்லியின் அனைத்து பெண்களும் தங்களுக்கான திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். முதல் நாளிலேயே பாஜக அதன் வாக்குறுதியை மீறத் தொடங்கியுள்ளது. அவர்கள் சொன்ன திட்டத்தை நிறைவேற்றவில்லை. டெல்லி மக்களை ஏமாற்ற பாஜக முடிவு செய்துள்ளது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி பேரவைத் தேர்தலில் வென்று 27 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக ஆட்சியை அமைத்துள்ளது. டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆறு கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்வர் ரேகா தன்வசம் பொதுப்பணி, சேவைகள், நிதி, வருமானம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, நிலம் மற்றும் கட்டிடம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, புலனாய்வு, நிர்வாக சீர்திருத்தம், திட்டமிடல் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளின் பொறுப்புகளை கவனித்துக்கொள்கிறார்.