புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கடந்த 2022 நவம்பரில் முதன் முறையாக காசி தமிழ் சங்கமம் (கேடிஎஸ்) நடைபெற்றது. இதை தொடங்குவதற்கு முன்பாக சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு வந்தது. இதனால் கேடிஎஸ் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, வாராணசியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) ஓர் இருக்கை அமைக்கப்படும் என அறிவித்தார்.
செப்டம்பர் 11, 2021-ல் மத்திய கல்வி துறையின் யூஜிசி, பிஎச்யூவுக்கு முறைப்படி கடிதம் அனுப்பியது. இதற்கு அடுத்த 2022-23 நிதியாண்டில் முதல் காசி தமிழ் சங்கமம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாரதி இருக்கை பணிகளுக்காக ரூ.10.6 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
எனினும், அதன் பிறகு பாரதி இருக்கைக்கான பேராசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால் அந்தத் தொகையை அந்த நிதியாண்டில் செலவு செய்ய இயலவில்லை. அடுத்த ஆண்டும் ரூ.10.6 லட்சம் வழங்கப்பட்டது. பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கு பதில் ஐந்து ஆசிரியர்கள் கொண்ட குழுவை பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்து பாரதி இருக்கை பணிகளை செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த இரு ஆண்டுகளாக அந்த ஐந்து பேர் கொண்ட ஆசிரியர் குழு, பாரதி இருக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு பாரதி இருக்கை ஆய்வாளர் பணியிடமும் ஓர் அலுவலக செயலாளர் பணியிடமும் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் பாரதி இருக்கை பேராசிரியர் பணியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை. அதன் காரணமாக பாரதி இருக்கை பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என புகார் உள்ளது.
ஏனெனில், எந்த ஒரு இருக்கைக்கும் நியமிக்கப்படும் பேராசிரியர் மட்டுமே அதன் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த முடியும். அதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியையும் முழுமையாக செலவு செய்ய இயலும்.
எனவே, பாரதி இருக்கை பேராசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. யூஜிசியும், பிஎச்யூவும் அதற்கான முன்னெடுப்புகளை உடனே செய்து பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாட்டிலிருந்து பிஎச்யூவில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் பேராசிரியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.