ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்தது. இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ. 535 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. இதனால் ராமேசுவரத்துக்கு வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. புதிய பாலத்தின் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
சில குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். அவற்றை சரி செய்த பின்னரே புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவர் சுட்டிக்காட்டிய பணிகளும் சரி செய்யப்பட்டன. மேலும், மண்டபம் வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் பராமரிப்பு பணிகளுக்காக பயணிகள் இல்லாமல் காலி ரயில் பெட்டிகளுடன் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது. பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மத்தியில் செங்குத்து தூக்குப் பாலப் பணிகளால் கடந்த மே மாதத்திலிருந்து கப்பல்கள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல இன்று (பிப்.21) அனுமதி அளிக்கப்பட்டது.
காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டு கொச்சி செல்வதற்காக பாம்பன் தெற்கு பாக்ஜலசந்தி கடல் பகுதியில் சிறிய ரக கப்பல் ஒன்று காத்திருந்தது. இன்று மதியம் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப்பாலம், பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலம் ஒரு சேர தூக்கிய பின்னர் , அவற்றை கடந்து கொச்சிக்கு அக்கப்பல் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து, தூக்குப் பாலங்கள் இறக்கப்பட்டு காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபத்திலிருந்து ராமேசுவரத்துக்கு பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.