திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரவில் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரண்டாம் நாள் காலையில் ஐந்து தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்திலும், அன்ன வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். முன்றாம் நாளில் சிம்ம வாகனத்திலும், முத்துப்பந்தல் வாகனத்திலும் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலையில் கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வாகன சேவைக்கு முன்னால் மங்கல வாத்தியங்கள் முழங்க, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.