சென்னையில் இன்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI), ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ நடத்தி வருகிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்த கருத்தரங்கு நாளையும் தொடரும்.
இந்தக் கருத்தரங்கத்தின் மையமே ‘ரீஜினல் டு குளோபல்’ என்பதாகும். அதாவது, மீடியாத்துறையில் கலாசாரங்கள் மற்றும் மண்டல தொழிற்சாலைகளை ஒன்றிணைத்தல் ஆகும்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், FICCI மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் கமிட்டியின் தலைவர் கெவின் வாஷ், அதன் இணை தலைவர் சந்தியா தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FICCI மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் கமிட்டியின் தலைவர் மற்றும் மெட்டா இந்தியாவின் இணை தலைவர் சந்தியா தேவநாதன், “இந்திய கன்டென்ட்டுகள் தற்போது உலக அரங்கிற்குள் செல்ல தொடங்கியுள்ளன. மேலும் பிசினஸ், கதைகள் சொல்லும் எஃப்.எம் போன்ற பல புது கண்டுபிடிப்புகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகளவிலான சந்தைகளை தொட்டுள்ளது.
தென்னிந்தியா சினிமா என்று வரும்போது, சமீபத்தில் அதில் புதுவிதமான கதைகளம், தொழில்நுட்ப அட்வான்ஸ்மென்ட், திறமையான சந்தைப்படுத்துதல் என புதுமைகளை பார்க்க முடிகிறது. இவை விரைவில் உலக அளவிலான இந்தியாவின் பார்வையை மாற்றும்” என்று பேசினார்.
நடிகர் கமல்ஹாசன், “நான் சினிமாவுக்கு மிகப்பெரிய ஃபேன்… அதுப்போல சினிமாவை வளர்க்கும் அனைத்திற்கும் ஃபேன். அப்படி பார்த்தால் நான் FICCI அமைப்பிற்கும் ஃபேன். நான் FICCI-யின் ஒரு பார்ட்டும் தான்.
கதை சொல்லல் என்பது மனித வரலாற்றிலேயே இணைந்தது. எந்த ஆயுதமும் கண்டுபிடிக்காத காலத்தில் கூட, நாம் கதை சொல்லிக்கொண்டிருந்தோம்.
ஒ.டி.டி புதிதாக வந்தப்போதே, அதை நான் வரவேற்றேன். அது சினிமாவின் இன்னொரு வருமானத்திற்கான மாடல். சினிமா மூலம் மக்களிடையே பொருளாதாரம் மற்றும் கலாசார விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.
உதாரணத்திற்கு, அமெரிக்கா எப்படி இருக்கிறது, அந்த மக்கள் எப்படி உடை அணிகிறார்கள் என்பதை பள்ளி, கல்லூரிகளில் மட்டும் தெரிந்துகொள்ளவில்லை. சினிமா மூலமும் தெரிந்துகொள்கிறோம்… புரிந்துகொள்கிறோம்.

இந்திய சினிமா, இந்தியாவின் விளம்பர தூதராக இருந்து வருகிறது. அதற்கேற்ற மாதிரி நமது திரைப்படங்கள் அமைய வேண்டும்.
நடிகர்கள், இயக்குநர்கள் போன்ற டாப் திரைத்துறை கலைஞர்கள் மட்டுமல்ல, அனைத்து திரைத்துறை கலைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்கென ஐ.டி.ஐ தொடங்கப்பட வேண்டும். அப்போது தான் சினிமா இன்னும் வளமடைய முடியும்.
என்னிடம் பலர் ‘எங்கே நீங்கள் அனைத்தையும் படித்தீர்கள்?’ என்று கேட்கிறார்கள். என்னுடைய பள்ளிக்கூடம் ‘என்னுடைய குரு பாலசந்தர்’. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு படங்களிலும் பலவற்றை தெரிந்துகொண்டேன்.
ஏ.ஐ-யை பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும். அதை நம்முடன் இணைத்துகொள்வோம். அவ்வளவு தான்.
இங்கு வந்திருக்கும் துணை முதல்வரிடம் திரைப்படங்களுக்கான இரட்டை வரி முறையை மாற்ற வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனையூரில் 90 ஏக்கரில் 150 கோடி ரூபாய் மதிப்பில் குடியிருப்பு அமைத்து கொடுத்த முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசிற்கும் திரைப்பட கலைஞர்கள் சார்பில் நன்றி” என்று பேசினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மற்ற மொழிகள் சினிமாவில் பொழுதுப்போக்கை மையமாக கொண்டிருந்தப்போது, தமிழ் சினிமா திரைப்படங்கள் மூலம் சமுதாய மாற்றங்களை கொண்டிருந்தன. 2009-ம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை பொழுதுப்போக்கின் மையமாக்க மாற்றுவது என்னுடைய கனவு என்று கூறினார். அதை மெய்யாக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சினிமா துறைக்கு பல நலதிட்டங்களை செய்து வருகிறது. அதில் ஒன்று சென்னையில் 152 ஏக்கரில் ஃபிலிம் சிட்டி.
இப்போது தமிழ்நாடு போஸ்ட் புரோடக்சன்களுக்கு உலகளவிலான ஹப்பாக மாறி வருகிறது. சர்வதேச திரைப்படங்கள் கூட, திறமையான திரைப்பட கலைஞர்களை தேடி இங்கே வருகின்றனர்.
கமல் சார் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் நிச்சயம் பேசுவேன். விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.









Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
