IND vs PAK, Playing XI Changes: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு (India vs Pakistan) இடையிலான குரூப் சுற்று போட்டி வரும் ஞாயிறு அன்று (பிப். 23) நடைபெற இருக்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி அன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.
IND vs PAK: பின்தங்கியிருக்கும் பாகிஸ்தான்
நடப்பு தொடரில் இரு அணிகளுமே தலா 1 போட்டியை விளையாடி உள்ளன. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியது. துபாயில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. பாகிஸ்தான் ரன்-ரேட்டில் பின்தங்கி புள்ளிப்பட்டியலில் குரூப் ஏ-வில் கடைசியாக உள்ளது.
IND vs PAK: பரிதாபமான நிலையில் பாகிஸ்தான்
இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்கள் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை இந்தியா உடனான போட்டியில் தோற்றுவிட்டால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேறிவிடும். சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறும் நிலையில், பாகிஸ்தான் அணி அங்கு வெறும் 2 போட்டிகளை மட்டும் விளையாடி தொடரை விட்டு வெளியேறினால் அது அந்த அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் துரதிருஷ்டவசமான ஒன்றாக இருக்கும்.
IND vs PAK: பாகிஸ்தான் செய்யும் அந்த ஒரே ஒரு மாற்றம்?
அந்த வகையில், பாகிஸ்தான் அணி இந்த கோப்பையை தக்கவைக்காவிட்டாலும் சரி, குறைந்தபட்சம் இந்திய அணியையாவது வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் விளையாடும் எனலாம். எனவே, பாகிஸ்தான் அணி வெற்றிகரமான பிளேயிங் லெவனை அமைக்க முயற்சிக்கும். ஃபக்கார் சமான் இல்லாத நிலையில், அவருக்கு பதில் இமாம் உல்-ஹக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs PAK: தரமான ஸ்பின்னர்கள் இல்லை
வேறு மாற்றங்களை பாகிஸ்தான் செய்யாது. அவர்களிடம் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அப்ரார் அகமது மட்டுமே பிரதான சுழற்பந்துவீச்சாளராக உள்ளார். குஷ்தில் ஷா மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் பார்ட் டைம் ஸ்பின்னராக இருப்பார்கள் என்றாலும் இவர்களும் 15-20 ஓவர்களை வீசியாக வேண்டும். மற்றபடி, ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.
IND vs PAK: இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம்
மறுபுறம் இந்திய அணியும் பெரியளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. குல்தீப் யாதவிற்கு பதில் வருண் சக்ரவர்த்தியை (Varun Chakaravarthy) மட்டும் கொண்டுவந்து அணியில் ஒரு X Factor வீரரை வைத்திருக்க விரும்பும். வருண் ஒருவேளை சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு எதிர்வரும் போட்டிகளில் பெரிய நம்பிக்கையை அது அளிக்கும்.
IND vs PAK: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
தற்போதைய சூழலில், பாகிஸ்தானின் மோசமான டாப் ஆர்டர், அனுபவமில்லாத சுழற்பந்துவீச்சு, தொடர் தோல்விகள் காரணமாகவும், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நல்ல காம்பினேஷன் வைத்து தொடர் வெற்றியுடன் நம்பிக்கையுடன் இருக்கும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
IND vs PAK: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, வருண் சகரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பாபர் ஆசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), சல்மான் அலி ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப்.