காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) தான் அப்பெண் என்பது தெரிகிறது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளச் சிறிது காலம் வேண்டும் என்று டேட் செய்கிறார்கள். அந்நேரத்தில், முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிக்கை வர, உடைகிறார் பிரபு. ‘நிலா – பிரபு காதலில் என்னதான் ஆச்சு’ என்பதை பிளாஷ்பேக்கிலும், அந்தத் திருமணம் நடக்குமா, இவர்களின் உறவு என்ன ஆகும் என்பதை நிகழ்காலத்திலும் பேசுவதே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் கதை.
“எப்பா தனுஷ்ப்பா…” என்று ‘துள்ளுவதோ இளமை’, ‘திருடா திருடி’ ஆகிய படங்களில் நாம் பார்த்த இளமை தனுஷை, மீண்டும் டீ ஏஜிங் செய்து நிறுத்தியது போல வந்து நிற்கிறார் பவிஷ் நாராயண். உடல்மொழி, குரல் என அனைத்திலும் மாமாவின் சாயல் அப்படியே இருக்கிறது. ஆனால், எமோஷனல் அழுகாச்சி காட்சிகளில் இன்னும் கவனம் வேண்டும் பிரதர்! ஜாலியான பாடி லேங்குவேஜ், கலகல காமெடி பன்ச் என நண்பராக வரும் மாத்யூ தாமஸ் அடிப்பொலி சேட்டா! படம் தடுமாறும் இடங்களிலெல்லாம் சிரிப்பு டானிக் தருவது இவரின் வசனங்கள்தான்! ஆனால், அவருக்கான டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகியாக வரும் அனிகா சுரேந்திரன் கியூட் காட்சிகளில் ஹார்ட் வாங்க முயல்கிறார். ஆனால் எமோஷன் காட்சிகளில் ஹார்ட் பிரேக் செய்ய தவறுகிறார். ‘காதல் வேறு, கல்யாணம் வேறு’ எனக் குறைந்த நேரமே வந்தாலும், முதிர்ச்சியான பாத்திரமாக மனதில் நிற்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இரண்டாம் பாதியில் வரும் ரம்யா ரங்கநாதனும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் சரத்குமார் நடிப்பில் குறையேதுமேயில்லை. ஆனால் இறப்பதற்கு ஐந்து நிமிடங்கள்தான் இருக்கின்றன என்று அவரே கணிப்பது எல்லாம் டூடூ மச் பாஸு! மாடர்ன் பெற்றோர்களாக வரும் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணனும் நடிப்பில் ஒரு குயிக் கேமியோ ஆடுகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கோல்டன் ஸ்பேரோ’ ஏற்கெனவே நம் நெஞ்சில் ஏரோ விட, ‘ஏட்டி’, ‘காதல் பெயில்’ பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. மேகத்தில் மறைந்து மறைந்து தெரியும் நிலவினைப் போல, பின்னணி இசை ஆங்காங்கே வந்து ஃபீல் குட் உணர்வைக் கொடுக்கிறது. காஸ்டியூம் டிசைனர் காவ்யா ஸ்ரீராமின் நேர்த்தியான வடிவமைப்பில், கனவுலகில் இருப்பது போன்று வரும் பாடலின் விஷுவல்ஸ் புதுமை! கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பு பாடல்களிலும், கல்யாண செட்டப்களிலும் ஆழமாகவே தெரிகிறது. கலர்ஃபூல்லான பிரேம்கள், சிறப்பான கோணங்களென லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும், அதைத் தொந்தரவு செய்யாத ஜி.கே பிரசன்னாவின் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாகப் படத்திற்கு வலு சேர்கின்றன.
படம் முழுக்க 2கே கிட்ஸ் சூழ்ந்து இருப்பதால், இன்றைய காதல் கதையாக இருக்குமோ என்று நுழைந்தால், டிரெய்லரில் சொன்னது போல ‘ரொம்ப யூஷுவலான ஸ்டோரி’யாகவே விரிகிறது திரைக்கதை. ‘குக் அல்ல ஃசெப்’ என்று சொல்லும் நாயகன், ‘சோறு’ என்றாலே ஏங்கும் நாயகி, அதற்கான காரணங்கள் என்று கதாபாத்திர வடிவமைப்புகளை நன்றாகவே சமைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அதேபோல, துணை கதாபாத்திரங்களின் பின்கதைகளையும் நன்றாகவே எழுதியிருக்கிறார். ஆனால், உணர்வுகளைத் தூண்ட வேண்டிய காட்சிகள், மிகவும் தட்டையான திரைமொழியால் உப்பு சப்பில்லாத உணவைச் சாப்பிடுவது போல, படத்தை விட்டு நம்மை விலக வைக்கின்றன. அதிலும், நாயகன் நாயகியைப் பிரிந்து செல்லும் காரணம் எல்லாம் 80’ஸ் ஹீரோக்களின் தியாகப் பரிதாபங்களை நினைவுபடுத்துகின்றன.
இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன், மாத்யூ தாமஸ் செய்யும் ரகளைகள் சற்றே ஆறுதல் தருகின்றன. அதே போல, அஞ்சலி – பிரபு நட்பு பாராட்டும் காட்சிகளும் க்ளிக்காகின்றன. ‘ஆகா வெளிச்சம் தெரிகிறதே’ என்று திரைக்கதையில் மெலிதாக வளர்பிறை எட்டிப்பார்க்க, அதைத் தொடர மனமில்லாமல் அடுத்தடுத்து வருகிற ஸ்பூப் போன்ற காட்சியமைப்பு, வந்த வெளிச்சத்தைக் குறைத்து தேய்பிறையாக மாற்றிவிடுகிறது. படத்தின் அடிப்படையாக இருக்கிற காதல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த கெமிஸ்ட்ரி சரியாக வேலை செய்யாததால், நாயகன் அழுது புரண்டு கண்ணீர் விட்டாலும், அவரே அடிக்கடி சொல்லும் வார்த்தையான “என்னை இது அஃபேக்ட் செய்யவில்லை” என்பதையே நாமும் சொல்ல வேண்டியிருக்கிறது.

பல இடங்களில் காமெடி வசனங்கள் நன்றாகவே எழுதப்பட்டிருந்தாலும் அவற்றைத் திரையில் ஏற்றிய விதம் செயற்கையாக இருப்பது ஏமாற்றமே!
மொத்தத்தில் ஃபீல் குட் படமா, காமெடி படமா என்று முடிவெடுக்க முடியாதபடி, இரு ஜானருக்கும் நியாயம் சேர்க்காமல் அரை முகத்தை மட்டுமே காட்டுகிறது இந்த நிலவு.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
