புதுடெல்லி,
இந்தியா-ஜப்பான் ராணுவ படைகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ‘தர்மா கார்டியன்'(Dharma Guardian) என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு ‘தர்ம கார்டியன்’ கூட்டு ராணுவ பயிற்சி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது.
அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி, வரும் பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கி, மார்ச் 9-ந்தேதி வரை ஜப்பானின் கிழக்கு புஜியில் உள்ள பயிற்சிப் தளத்தில் நடைபெற உள்ளது.
ஐ.நா. உத்தரவின் கீழ், போர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறையின் ஒரு பகுதியாக, இரு படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘தர்மா கார்டியன்’ பயிற்சி இந்தியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின்போது உயர்மட்ட உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.