மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகையால் ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில போக்குவரத்து அமைச்சரக் பிரதாப் சர்நாயக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறியதாவது: அரசுப் பேருந்துகளில் நமது சகோதரிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதுபோல் மூத்த குடிமக்களுக்கும் பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படுகிறது.
நாம் அனைவருக்கும் சலுகைகளை வழங்கிக் கொண்டே இருந்தால், போக்குவரத்து கழகத்தை இயக்குவது கடினம். இனிமேல் எந்த புதிய சலுகையும் வழங்கப்படாது. இவ்வாறு அமைச்சர் சர்நாயக் கூறினார்.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை அரசு நிறுத்தப் போவதாக வதந்தி பரவிய நிலையில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலையிட்டு எந்த சலுகையும் நிறுத்தப்படாது என்றார்.