இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை இன்று விடுதலை செய்யும் ஹமாஸ்

காசா முனை,

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

காசாவில் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும் இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது.

அதன்படி, அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒடெட் லிப்ஷிட் (வயது 85), ஷிரி பிபஸ் (வயது 32), அவரின் 4 வயது குழந்தை ஏரியல் பிபஸ், 9 மாத கைக்குழந்தை கிபிர் பிபஸ் ஆகியோரின் உடல்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், ஒப்படைக்கப்பட்ட உடல்களில் ஷிரி பிபசின் உடல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஷிரி பிபசின் உடலுக்குபதில் வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதையடுத்து, உடல் மாறிவிட்டதாக கூறிய ஹமாஸ், கொல்லப்பட்ட ஷிரி பிபசின் உடலை இஸ்ரேலிடம் இன்று ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட உடல் ஷிரி பிபஸ் உடையதுதானா?என்பது குறிது இஸ்ரேல் டிஎன்ஏ ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் 7ம் தேதி கடத்தப்பட்டவர்கள் என்றும், எஞ்சிய 2 பேர் 2014, 2015ம் ஆண்டுகளில் காசாவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

எலியா ஷொஹன், ஒமர் ஷெம் டம், ஒமர் வெங்வெர்ட், டெல் ஷஹொம், அவிரா மெங்குஷ்டா (2014ல் காசாவுக்குள் நுழைந்தார்) , ஹஷிம் அல் சையது (2015ல் காசாவுக்குள் நுழைந்தார்)

6 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 602 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 பேரை ஹமாஸ் விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தப்படி, 33 பேரில் உயிருடன் உள்ள எஞ்சிய 6 பேரும் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வருமா?, போர் மீண்டும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.