புதுடெல்லி: உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
12-வது சர்வதேச சுகாதார உரையாடல் மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், “கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை வழங்கியது. ‘தடுப்பூசி மைத்ரி’ எனும் அந்த திட்டத்தின் மூலம் ஏராளமான வளரும் நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றன. பல வளர்ந்த நாடுகள் தங்கள் மக்கள்தொகையைவிட பல மடங்கு தடுப்பூசிகளை சேமித்து வைத்திருந்த நிலையில், அதற்கு எதிராக இந்தியா செயல்பட்டது.
சில சிறிய நாடுகளில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்க இந்திய மருத்துவக் குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டன. இது கோவிட் காலகட்டத்தில் விதிவிலக்காக நிகழ்ந்த ஒன்று அல்ல. உண்மையில், இது அதற்கு முன்னும் பின்னும் உலகத்திற்கான நமது அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இந்தியா இன்று உலகெங்கிலும் உள்ள 78 நாடுகளில் 600க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளது. அவற்றில் பல சுகாதாரத் துறை சார்ந்த திட்டங்கள். அரசுக்கு இணையாக, இந்தியாவின் தனியார் சுகாதாரத் துறையும் பல்வேறு நாடுகளுக்கு தங்கள் சேவையை வழங்கி உள்ளன.
கோவிட் அனுபவம் பல நாடுகளுக்கு சுகாதாரத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்திய நிறுவனங்களும், இந்திய அரசாங்கமும், உற்பத்தியை உள்ளூர்மயமாக்கவும் திறன்களை வலுப்படுத்தவும் முயன்றுள்ளன. இந்த திசையில், நாங்கள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்று, ஆப்பிரிக்காவில் மருத்துவ மாணவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்கும் இ-ஆரோக்கிய பாரதி முயற்சியாகும்.
சமீபத்தில், காசாவில் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க 66.5 டன் மருத்துவப் பொருட்களை நாங்கள் அனுப்பினோம். அதற்கு முன்பு, சிரியாவில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவத் திறன்களை வலுப்படுத்த 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அனுப்பினோம். ஆப்கானிஸ்தானில் கூட, கடந்த சில ஆண்டுகளில் இந்தியா 300 டன் மருந்துகளை அனுப்பி உள்ளது. மேலும், காபூலில் நாங்கள் கட்டிய மருத்துவமனைக்கு நிபுணர்களை அனுப்பினோம்.
உலகளாவிய தெற்கிற்கு மட்டுமல்ல, உலகளாவிய வடக்கிற்கும் வலுவான மருத்துவ கூட்டாண்மை தேவைப்படுகிறது. உலகளாவிய வடக்கில், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தூர கிழக்கு நாடுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது.
‘ஹீல் இன் இந்தியா’ முயற்சியின் மூலம், மருத்துவ மதிப்பு, பயணம் மற்றும் வெளிநாட்டு நோயாளிகள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதை எளிதாக்குவதற்கு எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. குஜராத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ மையத்தை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இந்த நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகளை ஊக்குவிக்க ஆயுஷ் என்ற துறையை உருவாக்கிய ஒரு அரசாங்கமாக, நாங்கள் உள்ளோம். இந்தத் துறையிலும் அதிக சர்வதேச ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம், இன்று உலகின் மிகப்பெரிய அரசாங்க சுகாதார காப்பீடாகும். நமது குடிமக்களில் சுமார் 75 கோடி பேர் இத்திட்டத்தின் அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர். அவர்கள் 3,60,000 மருத்துவமனைகள் மற்றும் 5,70,000 சுகாதார நிபுணர்களை அணுகலாம். நமது தனிநபர் வருமான அளவில் இவ்வளவு பெரிய அளவில் இதைச் செய்வது உண்மையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் சக்திக்கு ஒரு சான்றாகும். இது மோடி அரசாங்கத்தின் நல்லாட்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
பல குடிமக்களுக்கு, நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளின் விலையும் ஒரு குறிப்பிட்ட கவலையாகும். இதை கருத்தில் கொண்டு 14,000 ஆயிரம் மக்கள் மருந்தகங்களை உருவாக்கி, அவற்றின் மூலம், பொதுவான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளோம்.
சுகாதாரம் என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வெறும் சலுகை மட்டுமல்ல. கோவிட் காலம் நம் அனைவருக்கும் ஒரு உண்மையான கற்றல் அனுபவமாக இருந்தது. அடுத்த சவாலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் அனைவரும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், மலிவு விலையில் அணுகலை உறுதி செய்யவும் விரும்புகிறோம்.
நாம் இன்னும் நெருக்கமாக ஒத்துழைத்தால் இந்த இலக்குகள் சிறப்பாக அடைய முடியும். எனவே, உலகிற்கு எனது செய்தி நாம் நமது ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்துவோம். அதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம். நாம் அனைவரும் அதிக விழிப்புணர்வு, பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஒரு சிறந்த நெட்வொர்க்குடன் செயல்படுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.