புதுடெல்லி: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை வழங்கப்பட்டது தொடர்பாக உடனடியாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசியதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மோகன் நாயுடு, “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் உடனடியாக ஏர் இந்தியாவிடம் பேசினோம். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். எங்கள் தரப்பில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகானிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன்” என தெரிவித்துள்ளார்.
போபாலில் இருந்து டெல்லிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “பூசாவில் வேளாண் திருவிழாவை தொடங்கி வைக்கவும், குருஷேத்திரத்தில் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கூட்டத்தை நடத்தவும் அதனைத் தொடர்ந்து சண்டிகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுமான பணிகள் காரணமாக, இன்று (சனிக்கிழமை) நான் போபாலில் இருந்து டெல்லிக்கு வர வேண்டி இருந்தது.
இதற்காக, நான் ஏர் இந்தியா விமான எண் AI436-இல் டிக்கெட் முன்பதிவு செய்தேன். எனக்கு இருக்கை எண் 8C ஒதுக்கப்பட்டது. நான் போய் இருக்கையில் அமர்ந்தேன். இருக்கை உடைந்து உள்ளே சென்றுவிட்டது. அந்த இருக்கையில் உட்கார்ந்திருப்பது வேதனையாக இருந்தது. மோசமான இருக்கை ஏன் எனக்கு ஒதுக்கப்பட்டது என்று விமான ஊழியர்களிடம் கேட்டபோது, இந்த இருக்கை சரியில்லை என்பதால், இதன் டிக்கெட்டை விற்க வேண்டாம் என்று நிர்வாகத்துக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், எனினும் தவறுதலாக இருக்கைக்கான டிக்கெட் விற்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு இருக்கை மட்டுமல்ல, பல இருக்கைகள் அப்படித்தான் உள்ளன.
என் சக பயணிகள், வேறு நல்ல இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் எனக்காக நான் ஏன் இன்னொரு நண்பரை தொந்தரவு செய்ய வேண்டும்? எனவே, அதே இருக்கையில் அமர்ந்து என் பயணத்தை முடிக்க முடிவு செய்தேன். ஏர் இந்தியா நிர்வாகத்தை டாடா எடுத்துக் கொண்ட பிறகு அதன் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்பது தற்போது புரிகிறது.
உட்காருவதில் உள்ள அசவுகரியத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் முழு தொகையையும் வசூலித்த பிறகு பயணிகளை மோசமான மற்றும் சங்கடமான இருக்கைகளில் அமர வைப்பது தவறு அல்லவா? இது பயணிகளை ஏமாற்றுவதாக இல்லையா? எதிர்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது பயணிகளின் அவசரத்தை தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஏர் இந்தியா நிறுவனம், “ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்க இந்த விஷயத்தை நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடன் பேச வாய்ப்பளித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று தெரிவித்திருந்தது.