சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது – பாக்.முன்னாள் வீரர்

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. மறுபுறம் அதே பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்டது. இதனால் எதிர் வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தான் தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியை துபாயில் நாளை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். அதேவேளை இந்திய அணி வெற்றி பெற்றால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். இதனால் இந்த ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். மேலும் குரூப் ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:– “குரூப் ஏ-யில் நியூசிலாந்து மிகவும் திறமையான அணி. இந்திய அணி குரூப் சுற்றை தாண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்த பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன். மேலும் லீக் சுற்றில் இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடிக்கும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.