செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது:
செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரிக்கிறது. இந்திய தொழில்களில், வெகு விரைவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரிக்கவுள்ளது. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டருப்பதாக, நாட்டில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக 10-ல் 6 நிறுவனங்கள் (59 சதவீதம்) தெரிவித்துள்ளன. 38 சதவீத நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளன.
ஏஐ நிர்வாகத்தை அமல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதால், 23 சதவீத நிறுவனங்கள் மட்டும் ஏஐ நெறிமுறைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை அமல்படுத்தியுள்ளன. ஏஐ தணிக்கை மற்றும் சார்பு மதீப்பீடுகளுக்கு 40 சதவீதத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏஐ பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்தப்போவதாக 51 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஐ பயன்பாட்டை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக 32 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘பிரிடிக்டிவ் ஏஐ, சாட்பாட்ஸ் மற்றும் மெஷின் லேனிங் போன்ற பல ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகளவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. ‘ஜெனரெட்டிவ் ஏஐ மற்றும் ஏஜென்டிக் ஏஐ போன்ற பிரபல தொழில்நுட்பங்களை விரைவில் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்தறை, நிதி சேவைகள், உற்பத்தி, போக்குவரத்து, தொலைதொடர்பு, விமான போக்குவரத்து உட்பட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, செயல்பாட்டு செயல்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டின் முதல் மூன்று வணிக நோக்கங்களாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.