மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னைக்கு பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்காக தாம்பரம் -மேல்மருவத்தூர் இடையே கூடுதல் ரயில்கள் இயக்கவும் அனைத்து ரயில்களையும் நிறுத்தி இயக்கவும் காஞ்சிபுரம் எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மதுராந்தகம் நகரை சுற்றி உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், பணிக்கு செல்வோர், பள்ளி, கல்வி நிறுவனங்கள் செல்வது உட்பட பல்வேறு தேவைகளுக்காக, நகரபகுதியில் இருந்து ரயில் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனினும், மேற்கண்ட ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தப்படாமல் உள்ளது. அதனால், தென்மாவட்டங்களில் இருந்து வரும்விரைவு ரயில்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதிலும், குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டுமே இங்கு நிறுத்தி இயக்கப்படுவதாகவும், அதிலும் சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், ரயிலில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கும் நிலை உள்ளதாகவும், இதனால் தாம்பரம் – மேல்மருவத்தூர் இடையே காலை மற்றும் மாலையில் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க காஞ்சிபுரம் எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மதுராந்தகம் ரயில் பயணிகள் சங்கத்தின் பொருளாளர் சரத்குமார் கூறியதாவது: மதுராந்தகம் தாலுக்காவை சுற்றி இருக்கும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் போதிய ரயில்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி, முத்துநகர் விரைவு ரயில்கள் அதிகாலை 6:30 மணிக்கே கடந்து சென்று விடுகின்றன. இதன்பிறகு, விழுப்புரம்-தாம்பரம் ரயில் மட்டுமே உள்ளது. அதன்பிறகு, போதிய ரயில்கள் நிறுத்தி இயக்கப்படுவதில்லை.
புதுச்சேரி – திருப்பதி ரயில் காலை 10 மணிக்கு பிறகே மதுராந்தகம் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இதனால், காலையில் பணிக்கு செல்லும் நபர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த ரயில் மூலம் உபயோகம் இல்லை. இரவிலும் சென்னையிலிருந்து, மதுராந்தகம் திரும்ப 8:30 மணிக்கு கடைசி ரயில் உள்ளது. அதன் பிறகு ரயில்கள் இல்லை. அதனால், காலையில் 6:30 மணிக்கு மேல் மற்றும் 9 மணிக்குள்ளும் இரவில் சென்னை அல்லது தாம்பரத்தில் இருந்து 9 மணிக்கு மேல்மருவத்தூர் வரையிலும் கூடுதலாக ரயில்கள் இயக்கினால், மதுராந்தகம் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக, மதுராந்தகம் எம்எல்ஏவை தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், காஞ்சிபுரம் எம்.பி.யிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதனால், எம்எல்ஏ மற்றும் எம்.பி. ஆகியோர் கள ஆய்வு செய்து கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சாய்தளம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பாக காஞ்சிபுரம் எம்.பி.யை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில், மதுராந்தகம் அருகேயுள்ள ரயில் நிலையங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால், மதுராந்தகம் ரயில் நிலையம் இன்னும் வளர்ச்சியை தொடங்கவில்லை. போக்குவரத்து வசதியிருந்தால் மட்டுமே நகரம் வளர்ச்சியடையும். சென்னைக்கு மதுராந்தகம் நகரிலிருந்து எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் வளர்ச்சி அடைந்துவிட்டது.
மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் பகுதிகளுக்கு ஏன் ரயில்கள் இயக்க தயக்கம் காட்டுகின்றனர்? ரயில் வசதியில்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவலம் உள்ளது. அதனால், தாம்பரம் – மேல்மருவத்தூர் இடையே கூடுதல் ரயில்களும் மதுராந்தம் ரயில் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் அனைத்து ரயில்களையும் நிறுத்தி இயக்கவும் எம்.பி. மற்றும் எம்எல்ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் கூறியதாவது: மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டும் மற்றும் தாம்பரம் – மேல்மருவத்தூர் இடையே கூடுதல் மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, என்னை சந்திக்க முடியவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பு மக்களிடமும் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக ரயில்வே துறைக்கு மனு மற்றும் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என்றார்.