ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 முதல் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறுகையில், “ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்” என்று தெரிவித்தார்.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தின் அருகே உள்ள எஸ்எல்பிசி சுரங்கப் பாதையில் ஒரு பகுதி சனிக்கிழமை காலையில் இடிந்து விழுந்தது. குறிப்பாக 14-வது கிலோ மீட்டரில் சுரங்கத்தின் இடது பக்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டபோது அங்கு பல தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என்று தெரிவித்தனர். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரங்கப் பணி, நான்கு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது கவலையைத் தெரிவித்துள்ளார். எஸ்எல்பிசி சுரங்கப் பாதை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் காயம் அடைந்த விபத்து குறித்த செய்தியை அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., தீயணைப்புத் துறையினர் உள்ளட்டோரை விரைவாக சம்பவ இடத்துக்கு செல்லவும், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.உத்தம் குமார் மற்றும் அவரது துறை அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்த மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, உள்ளே சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாக மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.