ஐதராபாத்,
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெற்று வந்த இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறுகையில், “ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்” என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்எல்பிசி சுரங்கப் பாதை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் காயம் அடைந்த விபத்து குறித்த செய்தியை அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., தீயணைப்புத் துறையினர் உள்ளட்டோரை விரைவாக சம்பவ இடத்துக்கு செல்லவும், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டதாக ரேவந்த் ரெட்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.