சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசில், இல்லாத துறைக்கு 20 மாதங்களாக குல்தீப் சிங் தலிவால் அமைச்சராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை முன்வைத்து பாஜக கடும் விமர்சனம் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் 20 மாதங்களாக “இல்லாத” துறைக்கு தலைமை தாங்கி வருவது கண்டுபிடடிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நிர்வாகத்தை கேலி செய்து வருவதாக பாஜக மூத்த தலைவர் பிரதீப் பண்டாரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை கேலிக்குரியதாக ஆக்கி உள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர், இல்லாத ஒரு துறையை 20 மாதங்களாக நடத்தியுள்ளார். ஒரு அமைச்சர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதல்வருக்குத் தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 21 அன்று பஞ்சாப் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான குல்தீப் சிங் தலிவாலுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை ஒதுக்கப்பட்டது. எனினும், நிர்வாக சீர்திருத்தத் துறை எனும் துறை இப்போது இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது, “செப்டம்பர் 23, 2024 தேதியிட்ட பஞ்சாப் அரசாங்க அறிவிப்பு எண். 2/1/2022-2 அமைச்சரவை/2230 இன் படி, கேபினெட் அமைச்சர் குல்தீப் சிங் தலிவாலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தத் துறை இன்று வரை இல்லை,” என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசாங்கத்தில் கடைசி அமைச்சரவை மாற்றம் செப்டம்பர் 2024 இல் நடந்தது. அப்போது முதல்வர் பகவந்த் மான், நான்கு அமைச்சர்களை நீக்கினார். அமைச்சரவையில் ஐந்து புதிய முகங்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து, இலாகாக்கள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தருண்ப்ரீத் சிங் சோண்ட், பரிந்தர் குமார் கோயல், ரவ்ஜோத் சிங், ஹர்தீப் சிங் முண்டியன் மற்றும் மொஹிந்தர் பகத் ஆகியோர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதல்வர் பகவந்த் மான் உள்துறை, நீதி, சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் உள்ளிட்ட எட்டு அமைச்சகங்களைத் தன் வசம் வைத்துள்ளார். ஹர்பால் சிங் சீமா நிதி, திட்டமிடல், கலால் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்ட நான்கு அமைச்சகங்களையும், அமன் அரோரா புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பயிற்சி உள்ளிட்ட ஐந்து அமைச்சகங்களையும் பெற்றுள்ளனர்.
டாக்டர் பால்ஜித் கவுர் சமூக நீதி அதிகாரமளித்தல் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சகங்களையும், குல்தீப் சிங் தலிவால் என்ஆர்ஐ விவகாரங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் (ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட துறை) பெற்றுள்ளனர். டாக்டர் பல்பீர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைகளை பெற்றுள்ளனர். ஹர்பஜன் சிங் மின்சாரம் மற்றும் பொதுப்பணி (பி&ஆர்) துறைகளைப் பெற்றுள்ளார்.