Indian National Anthem Played in Pakistan: ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இத்தொடரில் ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் இந்தியா – வங்கதேசம் மற்றும் மூன்றாவதாக தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதனைத் தொடர்ந்து 4வது லீக் போட்டி இன்று (பிப்.22) பாகிஸ்தானின் லாக்கூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் குரூப் ஏ-வில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த நிலையில் தான், இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக ஒலிக்கப்பட்டது.
மேலும் படிங்க: இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்… பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும் – ஏன்?
என்ன நடந்தது?
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து 20 நிமிடங்களில் விளையாடுவதற்கு வீரர்கள் தயாராகி மைதானத்திற்கு வந்தனர். பொதுவாக ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு முன்பும் விளையாடும் இரு அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், முதலில் இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் ஆஸ்திரேலியா தேசிய கீதம் ஒலிக்க வேண்டும். ஆனால் தவறுதலாக இந்தியாவின் தேசிய கீதம், ஜன கன மன என ஒலிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது துபாயில் தான் நடைபெறும் என முன்னதாகவே திட்டமிடப்பட்டது. பின்னர் எப்படி பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணியின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிங்க: “நாட்டுக்காக விளையாடவில்லை”.. ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்!