அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்கள், சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த காரணத்துக்காக அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவினர் இந்தியர்கள் 22 பேரை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளால் கடந்த 2021 மற்றும் 2022-ல் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு ஓராண்டு, இரண்டாண்டு மற்றும் மூன்றாண்டு என சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 23-ம் தேதி அன்று கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்தார். தண்டனை காலத்தை நிறைவு செய்த பிறகும் அவரை அந்த தேசம் விடுவிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 8 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், தண்டனை காலம் முடிந்த 180 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்.
அண்மையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர். கடந்த 7-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைந்து விடுவிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலினும்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.