காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1978-ம் ஆண்டு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகள் இல்லை. புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்காக ரூ.254 கோடி உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வேதாசலம் நகர், ராகவேந்திர நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பாதாள சாக்கடை பணிக்கான குழாய் பதிப்பதற்காக புதிதாக போடப்பட்ட பல சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் புதிதாக போடப்பட்ட பல சாலைகள் சேதமடைகின்றன. பாதாள சாக்கடை பணிகள் அவசியமான பணிகள் என்றாலும் பாதாள சாக்கடைக்கு ஏற்கெனவே திட்டமிட்டிருப்பார்கள்.
அப்படி இருக்கையில் பாதாள சாக்கடை அமைய உள்ள இடத்தில் புதிதாக சாலைகள் அமைத்து, அதனை ஏன் மீண்டும் உடைக்க வேண்டும். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இப்போது இந்த சாலைகளை புதிதாக அமைப்பதற்கு மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோருவார்கள். ஒருங்கிணைந்த திட்டமிடல் இல்லாததால் இதுபோல் நிதி வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆணையர் விளக்கம்: இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கேட்டபோது ஏற்கெனவே செவிலிமேடு பேரூராட்சியாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் இருப்பவை பேரூராட்சியாக இருக்கும்போது போடப்பட்ட சாலைகள். சில இடங்களில் மட்டும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன.
ஒரு வார்டில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும்போது ஒரு பகுதியை விட்டுவிட்டு கொடுக்க முடியாது. அதனால் அந்த வார்டு முழுவதும் பள்ளம் தோண்டப்படுகிறது. இதுபோல் பிரச்சினையை தவிர்க்க குடிநீர் இணைப்புகளும் இந்த பள்ளத்திலேயே கொடுக்கும்படி கூறியுள்ளோம். தற்போது நடைபெறும் பணிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன என்றார்.