இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிரதமரின் பதவி காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பதவில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா பணியாற்றி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸை நியமனம் செய்து அமைச்சரவை நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.

2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றினார். கோவிட்-19 கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதாரத்தை மீட்டு நாட்டிலுள்ள முக்கியமான நிதி சவால்களை சமாளித்தவர் சக்திகாந்த தாஸ். 40 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் நிதித்துறை, வரித்துறை, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை ( பி.ஏ ) மற்றும் முதுகலைப் பட்டங்களை ( எம்.ஏ) பெற்றார். அதனை தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். 1980 ஆம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். பதினைந்தாவது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் , G20- க்கு இந்தியாவின் ஷெர்பாவாகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார், சக்திகாந்த தாஸ். இந்நிலையில் மூன்றே மாதங்களில் மீண்டும் இவருக்கு பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.