பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவ 2 காரணங்கள்: கிருஷ்ணகிரி சம்பவத்தை முன்வைத்து அன்புமணி கருத்து

சென்னை: பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலைக்கு தமது உறவினருடன் சென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த 4 மனித மிருகங்களால் கத்தி முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதைத் தடுக்க தமிழக அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுகளை நடந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவது குறித்து தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலைதான் நிலவுகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.

பெண்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்பதையே மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. கிருஷ்ணகிரி கொடூரத்த்தில் சம்பந்தப்பட்டவர்கள் கூட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதுமட்டும் அரசின் கடமை அல்ல… பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை பாயும் என்ற சட்டப்படியான அச்சத்தை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது தான் அரசின் முதல் கடமை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கு இரு அம்சங்கள் தான் முதன்மைக் காரணம் ஆகும். அவற்றில் முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருப்பது. இரண்டாவது, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்பாடின்றி தொடர்வது ஆகும். கஞ்சா போதையில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் மிருகங்கள்.

அவர்கள் எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்து பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும். அதற்காக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.