லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். திரிவேணி சங்கமத்திற்கு வந்த கவர்னர் அங்கு புனித நீராடினார். இதனை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியா முழுவதிலுமிருந்து மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த எண்ணற்ற மில்லியன் இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாகராஜின் புண்ய தீர்த்தத்தில் திவ்ய, பவ்ய மகாகும்பில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்தேன். இங்கு காற்றில் பரவியுள்ள தீவிர நேர்மறை ஆற்றல் அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரமாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சி பெற்ற ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உறுதியான சான்றாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.