சென்னை: மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச் சர் எல்.முருகன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: புதிய கல்வி கொள்கை என்பது முதலில் தாய்மொழியையும், அடுத்ததாக ஆங்கிலம், மூன்றாவதாக விருப்ப மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதாகும். ஆனால், இந்தி மொழி திணிப்பு என தமிழகத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் திமுகவினர் மொழி அரசியலை புகுத்தி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.
மத்திய அமைச்சர் விளக்கம்: மத்திய கல்வி அமைச்சர் மூன்று பக்க கடிதத்தில் விளக்கமாக முதல்வருக்கு பதில் எழுதியிருக்கிறார். உலகத்தி லேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று உலக நாடுகளில் மோடி கூறி வருகிறார். தமிழக கல்வி திட்டங்களுக்கு மாநில அரசு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வரவேண்டிய தொகை நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம், முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும்தான்.
திமுக அரசு, பள்ளி மாணவர்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிக் பள்ளியில் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக்கொடுக் கப்படுகிறது. அப்படியிருக்க, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றாவது மொழி கற்பிக்க மறுக்கப்படுவது ஏன்? இது தான் நவீன தீண்டாமையின் உச்சம்.
வளர்ச்சி, முன்னேற்றம்… உலக அரங்கில் மாணவர் களை தயார்படுத்துவதற்கு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், ரூ.5 ஆயிரம் கோடியை பள்ளிகளுக்கு செலவு செய்திருக்க முடியும். இது ஒன்றும் 1965 கிடையாது என்பதை திமுகவுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன். இன்றைய இளைஞர்கள் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாக உள்ளனர்.
எனவே, இன்றைய இளைஞர்களை பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டாம். அவர்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது, அது மீது நமக்கு பற்று வரும். இன்னொரு மொழியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கப் போகிறது. இளைஞர்கள் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் கூறினார்.