போர்ட் லூயிஸ்: மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்துள்ளார்.
மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நவீன் ராம்கூலம், “எனது அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நமது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார் என்பதை அவைக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர் பணிகள் மற்றும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கான சமீபத்திய பயணங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி நமது நாட்டுக்கு வருகை தர ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகைய புகழ்பெற்ற ஆளுமையை வரவேற்கும் வாய்ப்பு நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு தனித்துவமான பாக்கியமாகும். மோடியின் வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 ஆம் தேதி மொரிஷியஸ் தனது தேசிய தினத்தைக் கொண்டாடவுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், மொரிஷியஸ் தேர்தலில் நவீன் ராம்கூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெற்றார். அப்போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “எனது நண்பர் நவீன் ராம்கூலத்துடன் ஒரு அன்பான உரையாடலை மேற்கொண்டேன், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். மொரீஷியஸை வழிநடத்துவதில் அவருக்கு பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்தினேன், மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தேன். நமது சிறப்பு மற்றும் தனித்துவமான கூட்டாண்மையை வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான மொரீஷியஸுடன் இந்தியா நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. வரலாறு, மக்கள்தொகை மற்றும் கலாச்சாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மிக வலிமையான பிணைப்பு உள்ளது. மொரிஷியசின் 12 லட்சம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.