கடலூர்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் செல்லக் கூடிய பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடலூரில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இன்று (பிப்.22) பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம்.
இந்தப் பணத்துக்காக நாங்கள் இன்று கையெழுத்து போட்டால், என்ன ஆகும்? 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் சென்றுவிடும். அந்தப் பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? அல்லது மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு தடைபட வேண்டுமா? பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் திறமை வளர வேண்டும் என்றுதானே நினைப்பார்கள்.
இன்னும் தெளிவாகக் கூறுகிறேன். நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. இந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல. அதைப் படிக்க யார் விரும்புகிறார்களோ, அவர்கள் இந்தி பிரச்சார சபாவுக்குச் சென்றோ, கே.வி. பள்ளிகளிலோ அல்லது வேறு வழியிலோ படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்ததும் இல்லை, தடுக்கப்போவதும் இல்லை. ஆனால், இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். திணிக்க நினைத்தால், தமிழர் என்றொரு இனமுண்டும், தனியே அவர்க்கொரு குணமுண்டும் என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்.
இருமொழிக் கொள்கையால், தமிழக மாணவர்களின் திறமை எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை உலகம் முழுவதும் வாழக் கூடிய தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் கேட்கிறார்.
அவருக்கு நான் கூறிக் கொள்கிறேன்… இது தமிழ்நாடு. தமிழை தாய்மொழியாக கொண்ட பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். எங்கள் உயிரைவிட மேலாக தமிழை மதிப்பவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழியை இணைத்தாலும் அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். ஒரு நிலத்தைக் கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி என்று சொல்லியிருக்கிறார். அவர் பழைய வரலாற்றை கூறியிருந்தாலும், அது தமிழகத்தின் புதிய வரலாறாக, கொடிய வரலாறாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.