“100 வேலைத் திட்ட முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2024-25-ஆம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் எந்த வேலையும் செய்யாத 37 பேருக்கு மொத்தம் ரூ.8.25 லட்சம், அதாவது சராசரியாக ஒருவருக்கு ரூ.22,297 வீதம் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய மோசடிகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் குறித்த அனைத்து விவரங்களும் தமிழக அரசிடம் உள்ளன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகத் தான் சமூகத் தணிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரியவரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயல்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த முறைகேடுகளில் 6302 புகார்கள் மீது மட்டும் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.1.89 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளை செய்த பணியாளர்கள், அதிகாரிகள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் தான் இப்போதும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை களத்தில் செய்ல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லை என்பதால், கடந்த சில மாதங்களாக பணி செய்த மக்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. உழைத்த மக்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படாத நிலையில், எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட உன்னதத் திட்டம் ஆகும். ஆனால், அது இன்றைய ஆட்சியாளர்களால் ஊழல் திட்டமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின்படி பணி செய்து இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.